செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழிலாளர்கள் சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி இனி மண் எடுக்கலாம்: அரசாணை வெளியீடு

சென்னை: செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழிலாளர்கள் சுற்றுசூழல் அனுமதியின்றி மண் எடுக்க அனுமதி அளித்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அனுமதிக்கப்பட்ட இடத்தில் இருந்து 1.5 மீட்டர் வரை மண் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. மண் எடுக்கும் இடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் மரங்களை நட வேண்டும். கிராமப்புற சாலைகளில் இருந்து 10 மீட்டர் வரையிலும் தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே சாலை, ஆறுகள், நீர்நிலைகளில் இருந்து 50 மீட்டர் வரையிலும் மண் எடுக்க தடை விதிக்கப்படுகிறது.

அரசின் விதிமுறைகளை உரிய வகையில் பின்பற்றப்படுகிறதா என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதேபோல், கனிமவளத்துறை அதிகாரி உட்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனுமதி கோரும் இடங்களில் நேரடியாக சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனுமதி கோரும் இடங்களில் உள்ள மண் கட்டுமானத்திற்கு உகந்ததா மற்றும் பயன்பாட்டிற்கு உகந்ததா என்பதை கண்டறிய மண் மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு அனுமதியையும் கோப்புகளாக பராமரித்து சேகரிக்க வேண்டும்.

மண் எடுக்க அனுமதி பெறும் நபர்கள் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும். காட்டு விலங்குகள், யானைகள் வசிக்கும் இடங்களில் இருந்து 10 கி.மீ தூரத்திற்கு மண் எடுக்க அனுமதி இல்லை. விவசாய நிலங்களில் மண் எடுக்க முன் கூட்டியே அனுமதிபெற்றிருக்க வேண்டும். மண் எடுக்க அனுமதி பெறும் நபர்கள் விதிகளை மீறி செயல்பட்டாலோ அல்லது அனுமதி இல்லாமல் சுரங்க பணிகளை மேற்கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை கண்காணிக்க பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: