45 மாவட்டங்களில் நக்சல் தாக்குதல் அச்சுறுத்தல்: 10 மாநில முதல்வர்களுடன் நாளை அமித் ஷா ஆலோசனை..! கடந்த 5 ஆண்டில் 2,280 பேர் தாக்குதலில் பலி

புதுடெல்லி: நாடு முழுவதும் 45 மாவட்டங்களில் நக்சல் அச்சுறுத்தல் இருப்பதால் 10 மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.  ஒன்றிய உள்துறை அமைச்சகத் தரவுகளின்படி, நாடு முழுவதும் நக்சல் அமைப்பின் வன்முறை  சம்பவங்கள் கணிசமாகக் குறைந்தாலும் கூட, சுமார் 45 மாவட்டங்களில் நக்சல் தாக்குதல்கள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் உள்ளன. குறிப்பாக நாடு முழுவதும் மொத்தம் 90 மாவட்டங்களில் நக்சல்களின் நடமாட்டம் இருக்கின்றன. இடதுசாரி தீவிரவாதம்  (எல்.டபிள்யூ.இ) என்றும் அழைக்கப்படும் இந்த நக்சல் அமைப்பினர், கடந்த 2019ம் ஆண்டில் 61  மாவட்டங்களிலும், 2020ல் சுமார் 45 மாவட்டங்களிலும் ஆங்காங்கே தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.

மேலும், கடந்த 2015ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை நக்சல் அமைப்பினர் நடத்திய பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் சுமார் 380  பாதுகாப்பு படையினர், 1,000 பொதுமக்கள் மற்றும் 900 நக்சலைட்டுகள்  கொல்லப்பட்டனர். அதாவது, 2,280 பேர் பலியாகி உள்ளனர். இதே காலகட்டத்தில் சுமார் 4,200 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக அந்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நக்சல் கும்பலால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அந்த மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து 10 மாநில முதல்வர்களுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (செப். 26) ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார், மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, மத்திய பிரதேசம், கேரள மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, நக்சல் பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைகள், பாலங்கள், பள்ளிகள், சுகாதார மையங்கள் போன்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து 10 மாநில முதல்வர்களுடன் அமித்ஷா கேட்டறிய உள்ளதாகவும், நவீன பாதுகாப்பு கருவிகள், தகவல் தொடர்பு வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: