அரசை தேடி மக்கள் வந்த காலம் மாறி மக்களை தேடி அரசு செல்லும் காலமாக திமுக ஆட்சி உருவாக்கி இருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அரசை தேடி மக்கள் வந்த காலம் மாறி, மக்களை தேடி அரசு செல்லும் காலமாக இந்த ஆட்சி உருவாக்கி இருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருக்க மரத்தின் சிறப்புகள் குறித்த கல்வெட்டு மற்றும் மக்களை தேடி மருத்துவ மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  இதையடுத்து, காது கேளாதோர் வாரத்தையொட்டி  மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக ₹98.80 லட்சத்தில், செவித்திறன் குறைபாடு கண்டறியும் கருவிகள் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:உலக காதுகேளாதோர் வாரம் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 20 முதல் 26 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏதோ இந்த ஒரு வாரம் மட்டும் இம்மக்களைக் கவனிக்கும் அரசு அல்ல. தொடர்ந்து மக்களை கவனித்துக் கொண்டு இருக்கக்கூடிய அரசு தான் திமுக அரசு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, ஏழை - எளிய, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய  மக்களைக் கைதூக்கி விடும் அரசாகத்தான் திமுக அரசு இருக்கிறது.  எப்போது எல்லாம் திமுக ஆட்சியில் இருந்திருக்கிறதோ, அப்பொழுது எல்லாம் அதை தொடர்ந்து நாம் நிறைவேற்றி கொண்டும் இருக்கிறது.

வானளாவிய வளர்ச்சி - பல்லாயிரம் கோடி திட்டங்கள் - பறக்கும் சாலைகள் ஆகியவை ஒரு பக்கம் அமைத்தாலும் - இன்னொரு பக்கத்தில் குடிசைகளை மாற்றி அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்ற அந்த நிலையிலும் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். துகேளாதவர்க்குக் கருவி மாட்டுவோம். இதுதான் திமுக அரசு. பெரிய விஷயங்களைப் பார்க்கும்போது சின்ன விஷயங்கள் கண்ணுக்குத் தெரியாது என்பார்கள். அது தவறானது, ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பெரியவை மட்டுமல்ல சின்னவையும் தெரியும். அனைவரது கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காது நுண் எலும்புக் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை இதுவரையில் 4,101 குழந்தைகளுக்குச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை 327 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சை செய்ய இயலாத குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை செய்யப்படுகிறது. அதற்கு 4 கோடி ரூபாய் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழுதடைந்த உபகரணங்களை மாற்றித் தருவதற்காக 3.62 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரத்து 572 பேருக்கு 108 கோடி ரூபாய் செலவில் புதிய காது கேட்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்துக்காக  10 கோடி ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வர முடியாதவர்கள் - பணம் இல்லாதவர்கள் - தீராத நோயாளிகள் - ஆகியோருக்கு அவர்களது கவலை போக்கும் திட்டமாக இந்தத் திட்டம் இருக்கிறது. அரசைத் தேடி மக்கள் வந்த காலம் இருந்தது. இப்போது அதை மாற்றி மக்களைத் தேடி அரசு செல்லும் காலமாக இந்த ஆட்சி உருவாக்கி இருக்கிறது. இந்த மாற்றத்துக்கு நேரம் காலம் பார்க்காமல் உழைத்து கொண்டு இருக்கக்கூடிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரை உங்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

சட்டமன்றத்தில் எந்த அமைச்சர்களையும் எதிர்கட்சியினர் புகழ்ந்து பேசுவது கிடையாது. நம்முடைய மா.சு வை தான் சட்டமன்றத்தில் புகழ்ந்து பேசுகிறார்கள். பாஜவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சட்டமன்றத்தில் மாசு இல்லாதவர் மா.சு என்று பாராட்டினார். அவருக்குத் துணை நின்று பணியாற்றி கொண்டு இருக்கக்கூடிய அதிகாரிகளையும் நான் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். ‘அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள். அழாத பிள்ளைக்கும் பால் கொடுப்பவள்தான் உண்மையான தாய். அத்தகைய தாயாக தி.மு.க. அரசு என்றைக்கும் இருக்கும். தலைவர் கலைஞர் ஒருமுறை சொன்னார், ஏழை - எளிய விளிம்புநிலை மக்களையும் அன்போடு அரவணைத்து அவர்களுக்கு அனைத்துமாக இருக்கும் அரசாக தி.மு.க. அரசு நிச்சயம் இருக்கும் என்று சொன்னார். அதைத்தான் நானும் வழிமொழிகிறேன். இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் தாரேஸ் அகமது, மற்றும்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

150 ஆண்டுகள் பழமையான பெருக்க மரம்

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள பெருக்க மரத்தின் சிறப்புகள் குறித்த கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்தார். இந்த பெருக்க மரம், உலகின் பழமையான மரவகைகளில் ஒன்றாகும். இம்மரம் ஆப்பிரிக்கா கண்டத்தைச் சார்ந்தது. சுமார் 500 ஆண்டுகள் வரை நீண்ட ஆயுட்காலம் கொண்டது. இம்மரத்தின் இலைகள் வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்தது.  37 அடி சுற்றளவு கொண்ட தண்டும், 65 அடி உயரமும் கொண்ட இந்த அரிய மரம் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையும் பாரம்பரியமும் மிக்க சென்னை மருத்துவக் கல்லூரியின் மகத்தான புராதானச் சின்னங்களில் ஒன்றாக மிளிர்கிறது. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள். அழாத பிள்ளைக்கும் பால் கொடுப்பவள்தான் உண்மையான தாய். அத்தகைய தாயாக தி.மு.க. அரசு என்றைக்கும் இருக்கும்

Related Stories:

>