பணியின் போது திறம்பட செயல்பட இன்ஸ்பெக்டர் உட்பட 4,800 பெண் காவலர்களுக்கு 3 நாள் பயிற்சி வகுப்பு: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்

சென்னை: பணியின் போது திறம்பட செயல்படும் விதமாக சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் பெண் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 4,800 பெண் காவலர்களுக்கான 3 நாள் சிறப்பு பயிற்சி வகுப்பை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இன்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கொரோனா விழிப்புணர்வு, கொரோனா தடுப்பு உபகரணங்கள், காவலர் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்கள் என பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கு 5 நாள் சிறப்பு புத்தாக்க பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மாநகர காவல் துறையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, மத்திய குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் பெண் இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 4,800 பெண் காவலர்களுக்கு காவல் நிலையத்தில் பணியிலும், வாழ்க்கையிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெறும் விதமாக ‘ஒர்க் லைப் பேலன்ஸ்’ என்ற 3 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம் எழும்பூரில் உள்ள புதுப்பேட்டை ஆயுதப்படை துணை கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த 3 நாள் சிறப்பு பயிற்சி முகாமை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். பயிற்சியின் போது, கண், காது, மூக்கு, தொண்டை, ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை வாய் புற்று நோய், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பரிசோதனையும் செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துறை தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: