மின் அலுவலக பெண் ஊழியர்களிடம் செயற்பொறியாளர் செக்ஸ் டார்ச்சர்: பரபரப்பு புகார்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு செயற்பொறியாளர் பாலியல் தொல்லை தருவதாக தமிழக முதல்வர் மற்றும் உயரதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் 4 பெண் ஊழியர்கள், மேற்பார்வை பொறியாளரிடம் நேற்று ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரிவு உதவியாளர்களாக பணி புரிகிறோம். இங்கு செயற்பொறியாளராக பணிபுரியும் கிருஷ்ணன் என்பவர் எங்களிடம் அலுவலக நேரங்களில் பதிவேடுகளை எடுத்து வரச்சொல்வார்.

அவ்வாறு எடுத்துச்செல்லும்போது ஆபாச வார்த்தைகளால் பேசி, கையை பிடித்து கிள்ளுவது மற்றும் தொட்டுப் பேசுவது, கன்னத்தில் கை வைத்து பேசுவது போன்ற உடல் ரீதியான பாலியல் தொல்லை தருகிறார். நீங்கள் எங்களிடம் தவறாக நடக்க முயன்றால் மேலதிகாரிகள் மற்றும் உங்கள் உறவினர்களிடம் தெரிவிப்போம் எனக்கூறினோம். அதற்கு அவர், ‘எவன் வந்தாலும் எதுவும் செய்யமுடியாது’ எனக்கூறி தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார். அலுவலகத்திற்கு நாங்கள் சரியான நேரத்திற்கு வந்தாலும் காலதாமதமாக வருகிறீர்கள் என வரவழைத்து எங்களை ஆபாசமாக திட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மேற்பார்வை பொறியாளர் வேல்முருகன் இதுகுறித்து உயரதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும், தமிழக முதல்வர், தலைமைச் செயலகம், தமிழ்நாடு மின்சாரதுறை அமைச்சர், மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கும் இந்த மனுக்கள் அனுப்பியிருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே, செயற்பொறியாளர் கிருஷ்ணன் சக ஊழியரை அலுவலகத்தில் அடித்தது சம்பந்தமாக புகார் அளித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: