சக காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க காவல்துறையினரே தயங்குகின்றனர் : நீதிபதிகள் காட்டம்!!

மதுரை:ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு ஒத்திவைக்ப்பட்டது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த வியாபாரி அர்ஷத்திடம், ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மதுரை நாகமலை பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி, கடந்த ஆக.27ல் கோத்தகிரியில் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘காவல் ஆய்வாளர் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டார். இதுவரையும் அவரிடமிருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’’ என எதிர்ப்பு தெரிவித்தார்.

தொடர்ந்து நீதிபதி, ‘‘குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் காவல்துறை ஆய்வாளராக உள்ளார். அவரது இந்த செயல் காவல்துறையை களங்கப்படுத்தும் விதமாக உள்ளது. இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். அவருக்கு சொந்தமான வீடுகளில் ஆய்வு நடத்தப்படவில்லை. பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படவில்லை,

அதற்கான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளரின் சொத்து, அவரது உறவினர்களின் சொத்து விபரங்கள் பதிவுத் துறையிடம் பெறப்பட்டுள்ளதா?’’ என கேள்வி எழுப்பினார்.மேலும் மதுரை தல்லாகுளம் மற்றும் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: