திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்: 147 வாக்கு சாவடி அமைப்பு-தேர்தல் பார்வையாளர் தகவல்

மன்னார்குடி : திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக 147 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் பார்வையாளர் கூறினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாரத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக மன்னார்குடி ராஜகோபால சுவாமிஅரசுக்கலை கல்லூரி மற்றும் சவளக்காரன் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளரும், பேரூராட்சிகள் இயக்கக ஆணையருமான டாக்டர் செல்வராஜ் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் டாக்டர் செல்வராஜ் கூறியது: திருவாரூர் மாவட்டத்தில் 32 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கைகள் கடந்த 15 ம் தேதி அறிவிக்கப் பட்டது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதியன்று துவங்கி வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான நேற்று முன்தினம் வரை மா வட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவி களுக்கு 111 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் நேற்று வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டது. நாளை 25ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள். அடுத்த மாதம் 9ம் தேதியன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவும் நடைபெறவுள்ளது.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6. மணி வரை நடைபெறவுள்ளது. இதில் கடைசி ஒரு மணி நேரம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கோவிட் 19 அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் தற்செயல் தேர்தல் 147 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் 31 ஆயிரத்து 422 ஆண் வாக்காளர்களும், 32 ஆயிரத்து 457 பெண் வாக்காளர்களும், 5 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 63 ஆயிரத்து 884 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.இவ்வாறு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் டாக்டர் செல்வராஜ் கூறினார்.ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் ஜீவானந்தம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: