மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 77வது பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  77வது பிறந்தநாளையொட்டி  நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 77வது பிறந்தநாளான நேற்று, தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்,

பாமக நிறுவனர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், தஞ்சாவூர் எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, இயக்குநர்கள் கவுதமன், சரவணன் மற்றும் ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியின்  மூத்த தலைவர்களும், மாவட்டச் செயலாளர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘திராவிட இயக்க போர்வாள்’

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: திராவிட இயக்கத்தின் போர்வாளாகவும், நாடாளுமன்றத்தில் தனது விவாதங்களால் நடுங்க வைக்கும் அனலாகவும், கொண்ட கொள்கைக்காக இடைவிடாத போராளியாகவும் வலம்வரும் என் ஆருயிர்ச் சகோதரர் வைகோவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது சொல்லும் செயலும் நூறாண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்.இவ்வாறு கூறியுள்ளார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் வைகோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Related Stories:

>