பணம் மதிப்பிழப்பின்போது நடந்த சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்; இபிஎஸ், ஓபிஎஸ் உட்பட 12 அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு நோட்டீஸ்: வருமான வரித்துறை நடவடிக்கை

சென்னை: பணம் மதிப்பிழப்பின் போது நடத்திய அதிரடி சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 12 பேருக்கு வருமான வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

அதைதொடர்ந்து கருப்பு பணத்தை பதுக்கிய தொழிலதிபர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை தங்களிடம் உள்ள கணக்கில் வராத ரூ500 மற்றும் ரூ1000 நோட்டுகளை வங்கியில் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி மாற்றினர். அந்த வகையில், தமிழகத்திலும் தொழிலதிபர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மொத்தமாக கொடுத்து புதிய ரூ2 ஆயிரம் நோட்டுகளாக மாற்றினர். அப்போது சட்டத்திற்கு விரோதமாக வங்கியில் மாற்றிய அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களிடம் மத்திய அரசு உத்தரவுப்படி வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.

இந்த சோதனையின் போது கிடைத்த ரகசிய ஆவணங்களில், அதிமுக ஆட்சி காலத்தில் பதவியில் இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர் ரூ10 கோடி, தங்கமணி ரூ2 கோடி, வைத்திலிங்கம் ரூ20.79 கோடி, உதயகுமார் ரூ3.65 கோடி, செல்லூர் ராஜூ ரூ45 லட்சம், சம்பத் ரூ1.50 கோடி, கே.சி.வீரமணி, சட்டப்பேரவை தலைவராக இருந்த தனபால் உட்பட 12 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அப்போது எம்எல்ஏவாக இருந்த கருணாஸ் ரூ1 லட்சம் என அனைவரும் பணம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வங்கியில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சோதனையின் போது சிக்கியதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி 153(சிஏ) பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட அதிமுக முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 12 பேரும் பணம் வாங்கியது உண்மையா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2016ம் ஆண்டு நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி தற்போது வருமான வரித்துறை திடீரென நோட்டீஸ் அனுப்பி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: