தாம்பரம் அருகே சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்து; ஷேர்ஆட்டோ நொறுங்கி பாதிரியார் புதுமாப்பிள்ளை உட்பட 3 பேர் பலி

* 3 பேர் காயம்

* டிரைவர் தப்பி ஓட்டம்

தாம்பரம்: தாம்பரம் அருகே சாலை தடுப்புச்சுவரில் மோதி ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில், பாதிரியார், புதுமாப்பிள்ளை உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திவிட்டு, தப்பிய ஷேர் ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து பெருங்களத்தூர் பேருந்து நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று புறப்பட்டது. சுமார் 11.30 மணியளவில் தாம்பரம் இரும்புலியூர் சிக்னல் அருகே ஷேர் ஆட்டோ வந்தபோது, சிக்னலில் ஆம்னி பஸ் நின்றுள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க, ஷேர் ஆட்டோவை டிரைவர் திருப்பியுள்ளார்.

அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலை நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி, எதிர் திசை சாலையில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. ஆட்டோவில், பயணம் செய்தவர்களில் 3 பேர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயமடைந்தவர்களையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், விபத்தில் பலியானது கடலூரை சேர்ந்த பாதிரியார் ஐசக் ராஜ் (45), உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுந்தர்ராஜன் (37), பாண்டிச்சேரியை சேர்ந்த பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் நாகமுத்து (36) என்பதும், காயமடைந்தவர்கள் பெருங்களத்தூரை சேர்ந்த ரஜினிகாந்த் (45), திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை (65),

ஆனந்தகுமார் (27) என்பதும் இவர்களில் நாகமுத்துவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதும் தெரிய வந்தது. மேலும், விபத்துக்கு காரணமான ஷேர் ஆட்டோ டிரைவர் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பி தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம் தாம்பரம் அருகே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்து குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோ ஓடுகிறது. இந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் தாம்பரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உட்பட அனைத்து சாலைகளிலும் இஷ்டத்திற்கு நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர்.

ஒரு ஷேர் ஆட்டோவில் டிரைவர் உட்பட குறைந்தது 10 பேர் முதல் 12 பேர் வரை செல்கின்றனர். ஷேர் ஆட்டோவில் அதிக பாரம் ஏற்றிச்செல்வதால், டிரைவரால் ஆட்டோவை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால்தான் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடக்கிறது. பெரும்பாலான ஷேர் ஆட்டோக்கள் தாம்பரம் ஜிஎஸ்டி சாலை நடுவே நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, ஷேர் ஆட்டோக்களால் ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் தாம்பரம் ஆர்டிஓ நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

Related Stories: