அமெரிக்கா செய்த எச்சரிக்கை ஆதார் தகவல்களை ஹேக் செய்ததா சீனா? ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் ஆதார் தகவல்களையும், பிரபல ஊடக குழுமத்தையும் சீன ஹேக்கர்கள் ஹேக் செய்ததாக அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தனியார் சைபர் பாதுகாப்பு நிறுவனமான இன்சிக்ட் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையில், ‘இந்தியா, சீனா இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இந்தியாவில் சீன ஹேக்கர்களின் கைவரிசை 261% அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை டேக்-28 என பெயரிடப்பட்ட குழு ஒன்று, வின்டி மால்வேர் எனும் ஹேக்கிங் சாப்ட்வேரை பயன்படுத்தி, இந்தியாவில் தேசிய அடையாள தகவல்களை பாதுகாக்கும் அமைப்பு மற்றும் மபி போலீஸ் துறை, பிரபலமான ஆங்கில ஊடக குழுமத்தின் தகவல்களை திருடி உள்ளது.

அவற்றை, சீன அரசின் ஆதரவு பெற்ற பல்வேறு ஹேக்கிங் குழுக்களிடம் பகிர்ந்துள்ளது,’ என கூறப்பட்டுள்ளது. அதாவது, ஆதார் தகவல்களை சீன ஹேக்கர்கள் திருடி இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா - சீனா எல்லை மோதல் தொடர்பான கட்டுரைகள் மீடியாக்களில் வராமல் தடுக்கும் நோக்கத்துடனும் இந்த ஹேக்கிங் நடந்துள்ளது. ஆதார் தகவல்கள் திருடு போனதாக கூறப்படும் குற்றச்சாட்டை, ஆதார் எண்களை வழங்கும் இந்திய தேசிய அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மறுத்துள்ளது. அந்த அமைப்பு அளித்த விளக்கத்தில், ‘யுஐடிஏஐ சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தகவல் திருட்டை தடுக்க பல கட்ட அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. மேலும், தகவல் பாதுகாப்பை மேம்படுத்த தொடர்ந்து உயர் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன,’ என கூறி உள்ளது.

Related Stories: