கிருஷ்ணகிரி அருகே டிரோன் கேமரா மூலம் சிறுத்தை கண்காணிப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே சிறுத்தையின் நடமாட்டத்தை டிரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள கூசுமலை பகுதியில் 2 குட்டிகளுடன் சிறுத்தை ஒன்று உள்ளது. இந்த சிறுத்தை அந்த பகுதியில் உள்ள ஆடுகள், நாய்களை கடித்ததாக அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் கடந்த 4 நாட்களாக அந்த பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி, நேற்று முன்தினம் கிருஷ்ணகிரிக்கு வந்து, சிறுத்தை சென்ற வழித்தடம், அதன் கால் தடங்கள் பதிந்துள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று வனத்துறை சார்பில் அந்த பகுதியில் டிரோன் கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டது. கூசுமலை, மேலுமலை வனப்பகுதி, சிக்காரிமேடு சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்கப்பட்டது. இதில் சிறுத்தை நடமாட்டம் எங்கும் பதிவாகவில்லை.

இன்று (22ம்தேதி) சிறுத்தையின் நடமாட்டம் இருந்த பகுதி முழுவதும் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தையின் நடமாட்டத்தை கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை இந்த பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர். தற்போது சிறுத்தை எந்த பகுதியில் உள்ளது என கண்காணித்து வருகிறோம் என்றனர்.

Related Stories: