திருப்பூரில் கால்வாய் அடைப்பை சீரமைத்த எம்.எல்.ஏ. செல்வராஜ்

திருப்பூர் : திருப்பூரில் சாக்கடை கால்வாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை எம்.எல்.ஏ. செல்வராஜ் சீரமைத்தார்.திருப்பூர் மாநகராட்சியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை காலங்களின் போது, சாக்கடை கால்வாய்களில், மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் சிறப்பு மாஸ்கிளீனிங் செய்ய மாநகராட்சி மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

இந்த பணி நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி முழுவதும் உள்ள சாக்கடை கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் மற்றும் கழிவுகள் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இதன் ஒரு பகுதியாக நேற்று காலை நல்லாத்துப்பாளையத்தில் நொய்யல் நதியை தூர்வாரும் பணியை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

அப்போது அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை பார்த்த அவர், உடனடியாக அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். மேலும் மாஸ்கிளீனிங் பணியையும் ஆய்வு செய்தார். அப்போது திருப்பூர் தெற்கு மாநகர திமுக பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன், வடக்கு மாநகர பொறுப்பாளர் ந.தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: