திருப்புத்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்புத்தூர் :  திருப்புத்தூர் காளியம்மன் கோயில் பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வாய்க்கால் பகுதிகளில் வீணாக செல்கிறது.கடந்த 2006-2011ல் திமுக ஆட்சியின் போது திருச்சி-ராமநாதபுரம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் சுமார் ரூ.615 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதில் திருப்புத்தூர் வழியாக வரும் காவிரி குடிநீர் ராமநாதபுரம் வரை செல்கிறது. இதில் திருப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம், திருச்சி முத்தரசநல்லூரிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. திருப்புத்தூரில் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

எனவே காவிரி குடிநீர் மட்டுமே இப்பகுதி மக்களின் குடிதண்ணீர் தேவையை ஓரளவிற்கு பூர்த்திசெய்து வருகிறது. இந்நிலையில், திருப்புத்தூர் வழியாகச் செல்லும் குழாய்களில் அடிக்கடி சில இடங்களில் உடைப்பு ஏற்படுவதால் அதிலிருந்து குடிதண்ணீர் வெளியேறி சாலைகளின் ஓரங்களில் உள்ள வாய்க்கால் பகுதிகளில் செல்கிறது. குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களாக மதுரை-சிங்கம்புணரி இணைப்பு ரோடு செல்லும் சாலையில் காளியம்மன் கோயில் அருகே உள்ள பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வாய்க்காலில் செல்கிறது. இதனால் இந்த குழாயில் இருந்து அடுத்த பகுதிக்கு செல்லும் தண்ணீர் குறைகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: