தமிழகம் முழுவதும் வரும் 25ம் தேதி வரை நடைபெற உள்ள மழைநீர் வடிகால் தூய்மை பணியில் 97,550 பணியாளர்கள்: நகராட்சி நிர்வாக துறை தகவல்

சென்னை: தமிழக நகராட்சி நிர்வாக துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் எதிர்நோக்கி உள்ள வடகிழக்கு பருவ மழையினால் நகர பகுதிகளில் அதிகப்படியாக தேக்கமாகும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது. பொதுமக்களுக்கு எந்தவித சுகாதார இடர்பாடுகள் ஏற்படாமல் தவிர்த்திடும் பொருட்டு, தமிழகம் முழுவதும் 20ம் தேதி (நேற்று) முதல் வரும் 25ம் தேதி வரை “மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம்” அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில்  மேற்கொள்ள திட்டமிடப்பட்டு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று சேலம் மாநகராட்சியில் துவக்கி வைத்தார்.

இப்பணிக்காக கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் அனைத்தையும் பெரிய மழைநீர் வடிகால், நடுத்தர மழைநீர் வடிகால் மற்றும் சிறிய  மழைநீர் வடிகால் என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்களில் சேகரமாகியுள்ள வடிகால் படிவுகளை அகற்றுவதற்கு பொக்லைன், ஜெட்ராடிங் இயந்திரம், ஜேசிபி இயந்திரம் மற்றும் தேவைப்படும் இதர இயந்திரங்களை பயன்படுத்தி இப்பணியானது துரிதமாக நடைபெற அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக உள்ளாட்சிகளிலுள்ள வார்டுகளை 6 பிரிவுகளாக பிரித்து 6 நாட்களுக்குள் பணியினை முடிப்பதற்கு ஏதுவாக நகரப்பகுதிகள் பங்கீடு செய்யப்பட்டு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்படி, 14 மாநகராட்சிகளிலுள்ள 829 வார்டுகளில் 1362 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு 23,838 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த பணியினை மேற்பார்வையிட 1572 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில் உள்ள 121  நகராட்சிகளில் 3,497 வார்டுகளில்   4,591   இயந்திரங்கள்   பயன்படுத்தப்பட்டு   42,634   பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த பணியினை மேற்பார்வையிட 3051 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மொத்தமுள்ள 528 பேரூராட்சிகளில் 7951 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் 205 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களும் தூர்வாரப்படவுள்ளன. இதற்காக 2830 இயந்திரங்களும் 28,624   பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 178 சாலைகள், மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக 2,414 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் கால்வாய் மொத்த தூரம் 82.884 கி.மீ  ஆகும். மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தி எடுக்கப்படும் வடிகால் படிவங்களை அகற்றும் பணி 227 சாலைகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக 722 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். வடிகால் படிவுகளை அகற்றும் பணி 2718 படிவுகளாகும். இந்த பணிகளுக்காக 7 ஜெட்ராடிங் மெஷின், 3 ரோபோடிக் எக்சிவேட்டர், 1 ஆம்பியன், 3 மினி ஆம்பியன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளது.

மாநில அளவில் சென்னை மாநகராட்சி மற்றும் 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் மற்றும் 528 பேரூராட்சிகளில் 9097 இயந்திரங்கள் மூலம் மழைநீர் வடிகால் தூய்மை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிக்காக 97,550 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 4623 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: