யாகசாலையில் போடப்பட்ட சூடான காசுகளை பெட்ரோல் டேங்க் அருகில் வைத்ததால் இருசக்கர வாகனம் தீப்பிடிப்பு: ஊராட்சி மன்ற துணைத்தலைவி பலி

மதுரை: மதுரை அருகே கோயில் குடமுழுக்கு விழா யாகசாலையில் போடப்பட்ட காசுகளை எடுத்து சென்றதால் இருசக்கர வாகனம் தீப்பற்றி ஊராட்சி மன்ற துணைத்தலைவி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட மேலவளவு ஊராட்சி மன்ற துணைத்தலைவராக இருந்தவர் சங்கீதா. இவர் கடந்த 14ஆம் தேதி கச்சராகன்பட்டியில் உள்ள விநாயகர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு சென்றுள்ளார். குடமுழுக்கு விழாவின் போது யாகசாலை பூஜையில் போடப்படும் காசுகளை எடுத்து வந்து வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என குடும்பத்தினர்  கூறியுள்ளனர்.

இதனால் குடமுழுக்கு விழா முடிந்ததும் அங்கு யாகசாலையில் போடப்பட்டு கருகிய நிலையில் இருந்த 11 காசுகளை எடுத்துள்ளார். சூடாக இருந்த காசுகளை ஒரு பையில் போட்டு தனது இருசக்கர வாகனத்தின் சீட்டிற்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். சாலிக்கப்பட்டி 4 வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த போது பெட்ரோல் டேங்கிற்கு அருகில் பெட்டியில் சூடாக வைக்கப்பட்ட காசுகளால்  தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

தீ உடனடியாக சங்கீதாவின் புடைவை மீது பரவியுள்ளது. தனியாக சென்று கொண்டிருந்த சங்கீதா தீயை அணைக்க முயற்சித்துள்ளார். ஆனால் தீ மளமளவென உடல் முழுவதும் பரவியுள்ளது. அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர். பின்னர் அவசர ஊர்தி மூலமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சங்கீதா அனுமதிக்கப்பட்டார். 60 சதவீத காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சங்கீதா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சூடான யாகசாலை காசு தான் தீப்பற்றியதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. எனினும் சங்கீதா உயிரை பறித்தது சூடான யாகசாலை காசு தானா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: