ஆவடி மாநகராட்சியில் 199 கி.மீ. கால்வாய் தூர்வாரும் பணி: அமைச்சர் ஆவடி நாசர் துவக்கினார்

ஆவடி: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு ஆவடி மாநகராட்சி, 17வது வார்டு, வசந்தம் நகர் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்களை பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்தார். இதன்பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் எதிர்வரும் வட கிழக்கு பருவமழையினால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுதல், அதன் காரணமாக டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயத்தை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகள் தவிர்த்திடும் வகையில், இன்று முதல் தொடங்கி 25ம் தேதி வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம் என்ற திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் அமைந்துள்ள 14.48 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 15 எண்ணிக்கையில் பெரிய வகை மழைநீர் கால்வாய்களை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை, மாநகராட்சிக்கு சொந்தமான பெரிய வகை கால்வாய்களை பொக்லைன் மற்றும் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரி அப்புறப்படுத்துதல், கால்வாயில் உள்ள இடர்பாடுகளை அகற்றுதல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மாநகராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள 199 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சிறிய வகை கால்வாய்கள், 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் 20 எண்ணிக்கை தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் 120 எண்ணிக்கையிலான தூய்மைப் பணியாளர்கள் மூலம் சிறிய வகை மழைநீர் கால்வாய்களை உள்ள கழிவு கசடுகள், செடி, கொடிகள், சகதிகளை தூர்வாரி தூய்மைப்படுத்துதல் பணிகளை 6 நாட்களுக்குள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக எந்திரங்கள், தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளது. இந்த பணிகள் மாவட்டம் முழுவதும் துரிதமாக நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணியின்போது கால்வாய் ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி ஆணையர் சிவகுமார், மாநகராட்சி பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர்கள் சங்கர், சத்தியசீலன், சுகாதார அலுவலர் ஜாபர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>