“பைக் பிரச்னைக்குத்தான் இந்த கூத்து’’ தெருவில் ஏட்டு நிர்வாண போஸ்: வீடியோ வைரலால் பரபரப்பு

அம்பத்தூர்: பக்கத்து வீட்டுக்காரர் பைக் பிரச்னையில் போலீஸ் ஏட்டு தெருவில் நிர்வாணமாக நின்று கூச்சல் போட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு; அம்பத்தூர், ஒரகடம், ஏகேஏ.நகர், பெரியார் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (40). இவர் கோயம்பேடு போக்குவரத்து பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் முருகன் (43). இவர் காய்கறி வியாபாரம் செய்கிறார்.

முருகன் தனக்கு சொந்தமான பைக்கை வீட்டின் அருகில் சாலையோரமாக நிறுத்துவாராம். இது தொடர்பாக முருகனுக்கும் ஏட்டு கிருஷ்ணகுமாருக்கும் அடிக்கடி பிரச்னை இருந்துள்ளது.

இதுசம்பந்தமாக நேற்று முன்தினம் கிருஷ்ணகுமார் குடிபோதையில் முருகனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது இந்த இடத்தில் உனது பைக்கை நிறுத்தக்கூடாது எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் முருகனின் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார். முருகனை ஆபாசமாக திட்டியதுடன் அடிக்க முயன்றுள்ளார்.

இதனால் பயந்துபோன முருகன் அங்கிருந்து கடைக்கு சென்றுவிட்டார். இதன்பிறகும் கோபம் அடங்காத ஏட்டு, முருகன் வீட்டு அருகே சென்று குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் வந்து அவரை சமாதானப்படுத்தி  அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் ஏட்டு அங்கிருந்து செல்லாமல் கூச்சல்போட்டதுடன் திடீரென தனது அரைக் கால் சட்டையை கழட்டி நிர்வாணமாக தெருவில் நின்றபடி பெண்களை நோக்கி ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின்படி, அம்பத்தூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் முருகன் அம்பத்தூரில் உள்ள மேற்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் அதிகாரிகள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனிடையே ஏட்டு கிருஷ்ணகுமார் குடிபோதையில்  நிர்வாண கோலத்தில் செய்த அட்டகாசங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories:

>