மத்தியப் பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஒன்றிய அமைச்சர் எல். முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்!!

போபால் : தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன் திடீரென்று ஒன்றிய ஒளிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால் மாநில தலைவராக முன்னாள் போலீஸ் எஸ்பி அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், மத்திய அமைச்சராக்கப்பட்ட முருகன், எம்பியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவர் 6 மாதத்திற்குள் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் 2 எம்பி பதவியும், புதுவையில் ஒரு எம்பி பதவிக்கும் அடுத்தமாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதில் தமிழகத்தில் இருந்து 2 எம்பி பதவிக்கு, திமுக சார்பில் போட்டியிடுகிறவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. இதனால் திமுக சார்பில் 2 பேர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். புதுவையில் இருந்து ராஜ்யசபா எம்பியாக எல். முருகன் தேர்வாக, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிடி கொடுக்காததால், வேறு மாநிலத்தில் அவரை எம்பியாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. இந்தநிலையில் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி தாவர்சந்த் கெலாட், கர்நாடகா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து காலியான அந்த இடத்துக்கு முருகன் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மத்தியப் பிரதேசத்தில் இருந்து முருகன் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முன்னிலையில் எல். முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தை சேர்ந்த 3வது எம்பி

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் திருநாவுக்கரசர், இல.கணேசன் ஆகியோர் ஏற்கனவே மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தற்போது அதே மாநிலத்தில் இருந்து 3வதாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தேர்வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: