அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி தீர்மானம் தேர்தல் ஆணையம் ஏற்றதில் எந்த சட்டவிரோதமும் இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின், 2017 செப்டம்பர் 12ல் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பதவியை கலைத்து விட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என புதிதாக இரு பதவிகளை உருவாக்கிய தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து அதிமுக உறுப்பினர் ராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், அதிமுக கட்சி விதிப்படி, புதிய பதவிகளை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. இது சம்பந்தமாக கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை ஏற்று தேர்தல் ஆணையம் 2018 மே 4ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

ஜெயலலிதா மரணத்தின் போது அமலில் இருந்த விதிகளை பின்பற்ற அதிமுக தலைமைக்கு உத்தரவிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அளித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளதில் எந்த சட்ட விரோதமும் இல்லை. இதில் உள்கட்சி விதிகள் பின்பற்றப்பட்டதா, இல்லையா என்று தேர்தல் ஆணையம் ஆராய முடியாது.   தேர்தல் ஆணையம்,  உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக சிவில் வழக்கு தான் தொடர முடியும் என உத்தரவிட்டு வழக்கை  முடித்துவைத்தனர்.

Related Stories: