அமைச்சர் நமச்சிவாயம் டெல்லியில் முகாம்; ராஜ்யசபா சீட்டுக்கு என்ஆர் காங்., பாஜ மல்லுக்கட்டு: கவர்னருடன் ரங்கசாமி திடீர் சந்திப்பு- பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ராஜ்யசபா சீட் யாருக்கு என்பது தொடர்பாக ஆளும் தேஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்ஆர் காங்கிரஸ், பாஜக இடையே மல்லுக்கட்டு தொடர்கிறது. இதையடுத்து அவசர பயணமாக டெல்லி சென்றுள்ள அமைச்சர் நமச்சிவாயம், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த அங்கு முகாமிட்டுள்ளார். இதனிடையே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை முதல்வர் ரங்கசாமி இன்று ராஜ்நிவாஸில் திடீரென சந்தித்து பேசினார்.

இது அரசியல் வட்டாரத்தில் அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் வருகிற அக்டோபர் 4ம்தேதி ராஜ்யசபா எம்பி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் (22ம்தேதி) கடைசி நாளாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது வரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் இப்பதவிக்கு போட்டியிட வேட்பாளர்கள் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. ஆளுங்கிற தேஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்ஆர் காங்கிரஸ் தனது கட்சி வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

ஆனால் பாஜகவோ முதன்முதலாக புதுச்சேரியில் இருந்து தனது கட்சி சார்பில் ராஜ்யசபா எம்பியை டெல்லிக்கு அனுப்ப வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளது. அப்போதுதான் பல்வேறு நலத்திட்டங்களை புதுச்சேரிக்கு பெற முடியும் என கூறிவருகிறது. இதில் முதல்வர் ரங்கசாமிக்கு உடன்பாடு இல்லாத நிலையில் நேற்று அவரை திலாஸ்பேட்டையில் உள்ள வீட்டில் மாநில பாஜக தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது இவ்விவகாரம் தொடர்பாக கட்சியின் தேசிய தலைமையிடம் பேசிக்கொள்வதாக ரங்கசாமி கூறியதால் இருவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதனிடையே அமைச்சர் நமச்சிவாயம் அவசர பயணமாக நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று அவர் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசுகிறார். புதுச்சேரியை சேர்ந்த ஜெயக்குமார், திருநள்ளாறை சேர்ந்த வாசு ஆகியோரில் ஒருவருக்கு ராஜ்யசபா சீட் கேட்டு தொடர்ந்து முகாமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் ராஜ்யசபா சீட் விவகாரத்தில் பாஜக எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

அதை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியிடம் பாஜக தேசிய தலைமை பேச்சுவார்த்தை நடத்தும் என தகவல் கசிந்தது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்படும் பட்சத்தில் உடனடியாக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு நாளை மறுநாள் மனுதாக்கல் செய்யப்படலாம் என இருகட்சி வட்டாரங்களும் தெரிவித்தன. இதனிடையே இன்று காலை திடீரென ராஜ்நிவாஸ் சென்ற முதல்வர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். புதுவையை தலைநகரமாக மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் அங்கு சென்றதாக கவர்னர் மாளிகை தகவல் தெரிவித்தது.

இருப்பினும் சந்திப்பில் ராஜ்யசபா சீட் விவகாரம் தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனிடையே ராஜ்யசபா எம்பி வேட்பாளர் தேர்வில் தேஜ கூட்டணியில் குழப்பம் நீடிப்பதை உன்னிப்பாக கவனித்து வரும் எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் ஆகியவை இணைந்து நேற்றிரவு தனியார் ஓட்டலில் ரகசிய கூட்டத்தை நடத்தின. இதில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் அவரை எதிர்த்து போட்டியிடுவது தொடர்பாக எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்கப்பட்டதாக தெரிகிறது.

இதில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டுமின்றி சில சுயேட்சைகளிடமும் செல்போனில் பேசி ஆதரவு திரட்டப்பட்ட நிலையில் இதுகுறித்த தகவல்களை திமுக தலைமையிடம் தெரிவிக்க கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னை சென்றுள்ளனர். இவ்விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி எடுக்கும் முடிவின் அடிப்படையில் எதிர்க்கட்சிகளின் நகர்வுகள் இருக்கும் என்று தெரிகிறது. கடந்த ராஜ்யசபா எம்பி தேர்தலில் புதுச்சேரியில் திமுக சார்பில் ஜெகத்ரட்சகன் போட்டியிட திட்டமிட்டிருந்தார்.

இதற்கு தனது கட்சிக்குள்ளே ஆதரவு கிளம்பியதால் தனது அரசியல் சாதூர்யத்தால் வேட்பாளர் கோகுலகிருஷ்ணனை அதிமுகவில் இணைய வைத்து வேட்பாளராக நிறுத்தி ரங்கசாமி வெற்றிபெற வைத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இத்தேர்தலிலும் கடைசி கட்டத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழுமா? என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

கவர்னர் மாளிகை விளக்கம்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கவர்னர் தமிழிசை தமிழிசை சவுந்தரராஜனை இன்று கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி அரசு மருத்துவமனைகளை உலக தரம் வாய்ந்த மருத்துவமனைகளாக தரம் உயர்த்தி புதுச்சேரி மட்டுமல்லாமல் பிற பகுதிகளிலிருந்து வரும் மக்களும் பயன்பெறும் வகையில் சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் அவற்றின் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, ஒவ்வொரு துறையை சேர்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை பெறுவது, ராஜீவ்காந்தி அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை துறைகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது, பிற துறை வல்லுநர்களின் ஆலோசனை கூட்டங்களை விரைவில் நடத்துவது,

புதுச்சேரியை வருங்காலத்தில் ஒரு மருத்துவ தலைநகரமாக மேம்படுத்தவும், மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் எடுப்பது ஆகியவை குறித்து கவர்னர் ஆலோசனை வழங்கினார். தான் ஒரு மருத்துவராகவும் கவர்னராகவும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்ததாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: