சிவகங்கை மாவட்டத்தில் ஒரேநாளில் 22,000 பேருக்கு தடுப்பூசி-ஆர்வத்துடன் போட்டுக்கொண்ட மக்கள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் மாதம் வரை கொரோனா முதல் அலையில் சுமார் 6 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டனர். மீண்டும் கடந்த மே மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. கடந்த மூன்று மாதமாக சிவகங்கை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 20ல் இருந்து 25 வரை உள்ளது. மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 15 லட்சத்து 29 ஆயிரத்து 140. இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11 லட்சத்து 23 ஆயிரத்து 898 பேர் உள்ளனர். நாள் தோறும் கொரோனா நோய்த் தொற்றுக்கான மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தினமும் காய்ச்சலுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன்மூலம் தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 48 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையம், 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

செப்.12 அன்று மாவட்டம் முழுவதும் 750 மையங்களில் 44 ஆயிரத்து 611 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

நேற்றைய சிறப்பு முகாமில் 200 இடங்களில் 22 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை முதல் தவணை தடுப்பூசி மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி என மொத்தம் 7 லட்சத்து 24 ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது.

சிறப்பு முகாம்களில் இரண்டு நாளில் மட்டும் 66 ஆயிரம் பேருக்கு கூடுதலாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவே மாவட்டத்தில் அதிகபட்சமாக இரண்டு நாளில் போடப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கையாகும். பொதுமக்கள் தொடர்ந்து ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் இம்மாதத்திற்குள் கூடுதல் எண்ணிக்கையை எட்டுவதற்கான வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: