வீட்டின் அருகே விளையாடியபோது மாயம் அம்பத்தூரில் இருந்து நாக்பூர் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: 2 பேரை தனிப்படை சுற்றிவளைத்தது

அம்பத்தூர்: அம்பத்தூரில் வீட்டின் அருகே விளையாடிய 3 வயது ஆண் குழந்தையை ரயிலில் நாக்பூர் கடத்திய 2 வாலிபர்களை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மிதிலேஷ் (23). இவரது மனைவி மீரா தேவி (20). தம்பதிக்கு, விஷ்ணு (5), ஷியாம் (3) என்ற மகன்கள் உள்ளனர். மிதிலேஷ் தனது குடும்பத்துடன் அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம், மாரியம்மன் கோயில் தெருவில், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மிதிலேஷ் தனது மனைவியுடன் வேலை செய்து வருகிறார்.

தினசரி இவர்கள் வேலைக்கு செல்லும்போது, குழந்தைகளை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு செல்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் வேலைக்கு சென்றனர். மாலையில் அவர்கள் வீடு திரும்பியபோது, இளைய மகன் ஷியாமை காணவில்லை. இதுபற்றி, பக்கத்து வீட்டினரிடம் கேட்டபோது, இங்குதான் விளையாடிக் கொண்டு இருந்தான். பிறகு எங்கு சென்றான் என தெரியவில்லை, என்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி, பல இடங்களில் குழந்தையை தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று காலை புகாரளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

அப்போது, மிதிலேஷ் வசிக்கும் வீட்டு மாடியில் வசிக்கும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷிவ்குமார் நோரியா (22), மோனு கபரிதாஸ் (25) ஆகியோர், தங்களது உடமைகளுடன் திடீரென மாயமானது தெரிந்தது. அவர்களை பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, அவர்கள்தான் குழந்தை ஷியாமை அழைத்து சென்றது தெரிந்தது. உடனே, அவர்களது செல்போன் எண்ணை டவர் மூலம் ஆய்வு செய்தபோது, அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று நாக்பூர் ெசன்ற ரயிலில் பயணித்தவர்களின் விவரங்களை சேகரித்தனர். அதில், ஷிவ்குமார் நோரியா, மோனு கபரிதாஸ் ஆகியோர் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றது தெரியவந்தது.

பின்னர், தனிப்படை போலீசார் சென்னையில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் உதவியுடன் நாக்பூரில் உள்ள போலீசாரை தொடர்பு கொண்டு அவர்களை பிடிக்க உத்தரவிட்டனர். அதன்படி நாக்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.  அவர்களிடமிருந்து குழந்தை ஷியாமையும் மீட்டு, அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, அம்பத்தூரில் இருந்து எஸ்.ஐ ஜெகநாதன் தலைமையில் தனிப்படை போலீசார் நாக்பூர் சென்று, குழந்தையை மீட்டனர். பிடிபட்ட வாலிபர்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் அங்கிருந்து சென்னை அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர். கடத்தப்பட்ட குழந்தையை, புகார் அளித்த 4 மணி நேரத்தில்  மீட்டு, குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

Related Stories: