விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.14 லட்சம், ரூ.20 லட்சத்துக்கு மேலும் ஒரு ஊராட்சி தலைவர் ஒன்றிய கவுன்சிலர் பதவி ஏலம்

விழுப்புரம்:  தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9ம் தேதி 2 கட்டமாக நடைபெறுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர், கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகள் ஏலம் விடப்படுவதாக பல்வேறு இடங்களில் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், செஞ்சி ஒன்றியம் பொண்ணாங்குப்பம் பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்  துத்திப்பட்டு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு ஒன்றிய கவுன்சிலர்  பதவிக்கான ஏலமும் நடந்ததாக தகவல் வெளியானது.

இதில் துத்திப்பட்டை சேர்ந்த  ஒருவர் ரூ.20 லட்சத்து 8 ஆயிரத்துக்கு ஒன்றிய  கவுன்சிலர் பதவியை ஏலம்  எடுத்ததாக கூறப்படுகிறது. துத்திப்பட்டு  கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர்  பதவி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான ஏலம்  அடுத்தடுத்து நடைபெற்றதால் அங்கு  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி கலெக்டர் மோகன் நேரில் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து விழுப்புரம் அருகே மேலும் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேருக்கு மேல் போட்டியிட போவதாக கூறப்பட்டது.

இதில் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ, அவரையே ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான ஏலம் அக்கிராமத்தில் நடைபெற்றது. இதில் ரூ.1 லட்சத்தில் இருந்து ஏலம் தொடங்கப்பட்டதில் 5 பேரும் போட்டி போட்டு ஏலத்தொகையை அறிவித்தனர். அப்போது வெள்ளேரிப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ.14 லட்சத்துக்கு ஏலம் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கிராம இளைஞர்கள் சிலர், முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையம் மற்றும் வருவாய்த்துறையினருக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக ஆட்சியர் மோகனிடம் கேட்ட போது, விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி, தலைவர் பதவிகள் ஏலம் விடுவதாக ஒரு சில ஊராட்சிகளில் புகார்கள் வந்தது. இது சம்பந்தமாக, அந்த பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு, பதவிகள் ஏலத்தை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்று பதவிகள் ஏலம் விடுவதாக தகவல் தெரிந்தால், சம்பந்தப்பட்டோர் சிறைக்கு அனுப்பப்படுவர். தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க தவறினால் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>