வேலைக்கு வராதீங்க வீட்டிலேயே இருங்க... காபூல் மாநகராட்சி பெண் ஊழியர்களுக்கும் தடை

காபூல்: ‘வேலை க்கு வர வேண்டாம், வீட்டிலேயே இருங்க...’ என்று காபூல் மாநகராட்சி பெண் ஊழியர்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.  ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள தலிபான்கள், பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். முதலில் விளையாட்டு வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தனர். மகளிர் விவகார அமைச்சகத்தை கலைத்தது. மாணவிகள், ஆசிரியைகள் பள்ளிக்கு செல்ல தடை விதித்தனர். அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களை மிரட்டி திருப்பி அனுப்பினர்.

இப்படி அடுக்கடுக்காக தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களின் நடவடிக்கையால் அந்நாட்டு பெண்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில், காபூல் மாநகராட்சியிலும் பெண் ஊழியர்கள் வேலைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் இடைக்கால மேயர் ஹம்துல்லா நமோனி கூறுகையில், ‘வடிவமைப்பு மற்றும் இன்ஜினியரிங் துறை, பெண்களுக்கான பொது கழிப்பிடங்களை நிர்வாகம் செய்யும் பணிகளில் ஈடுபடும் பெண்கள் மட்டுமே அலுவலகம் வர அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மற்ற பெண் ஊழியர்களை அனுமதிப்பதா? வேண்டாமா? என்ற முடிவு இன்னும் நிலுவையில் உள்ளது. ஆனால், அவர்கள் தங்கள் சம்பளத்தை பெற தடையில்லை,’’ என்றார். தலிபான்கள் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பாக, காபூல் நகராட்சியின் மொத்த ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர், அதாவது 3 ஆயிரம் பெண் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.

Related Stories:

>