கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை: கோயில் அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவு

சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவில் கூறியிருப்பதாவது:   இந்து  சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள  அறநிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் அமைந்துள்ள இடங்களில் கோயில் பெயர், கிராமம், நகர், அதன் புல எண் மற்றும் பரப்பளவு ஆகிய விவரத்துடன் கோயிலுக்கு சொந்தமானது என விவரம் தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகைகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்.

மேலும், கோயில் நிலங்களை ஆய்வு செய்து அங்கு தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்றும், முறுக்கு கம்பி, முள்வேலி அல்லது மதிற்சுவர் கட்டி பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.  அப்படி இல்லை எனில் அந்த இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிறுவனங்களுக்குச் சொந்தமான நகர்ப்புறங்களில் அமைந்துள்ள நிலங்களை முள்வேலி அல்லது மதிற்சுவர் கட்டி பாதுகாப்பதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: