உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை: நாளை இறுதி முடிவு என தகவல்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக-பாஜ இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில், பாஜ உள்ளாட்சித் தேர்தலில் அதிக அளவிலான சீட் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுக இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

வேட்புமனுத் தாக்கல் கடந்த 15ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் இருந்த பாமக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதிமுகவுடன் எந்தவித தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நடத்தாமல் தன்னிச்சையாக பாமக தலைமை அறிவித்தது அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக மக்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் பல்வேறு அறிவிப்புகளாலேயே பாமக இதுபோன்ற முடிவை எடுத்ததாகவும் கூறப்பட்டது.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் பல இடங்களில் தோல்வியை சந்திக்க நேரிடும் என பாமகவின் முக்கிய நிர்வாகிகள் தலைமைக்கு கூறியதாலேயே இதுபோன்ற தன்னிச்சை முடிவை பாமக எடுத்ததாகவும் தகவல் வெளியாகியது. இந்தநிலையில், அதிமுக-பாஜ இடையிலான கூட்டணியும் சந்தேகத்திற்கு இடையிலான ஒன்றாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக-பாஜ கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

உள்ளாட்சித் தேர்ளளளதலை அதிமுக கூட்டணியில் இருந்தே பாஜ சந்திக்கும் என உறுதிபடத் தெரிவித்தார். அந்தவகையில், இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக-பாஜ இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், மாபா.பாண்டியராஜன் மற்றும் பாஜ சார்பில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், பலராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, சட்டமன்றத் தேர்தலில் பாஜ 4 இடங்களில் வெற்றி பெற்றதை அடிப்படையாக வைத்து உள்ளாட்சித் தேர்தலில் அதிக அளவிலான இடங்களை கேட்டது. ஆனால், அதிமுக இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேட்கும் இடங்களை கொடுக்க முடியாது எனவும், சில இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் எனவும் அதிமுக தரப்பில் உறுதிபடத் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: