தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு..!

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பா் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கியது. வரும் 22 ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி தேதியாகும். வரும் 23 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம். கள்ளக்குறிச்சி-விவேகானந்தன், வேலூர்-விஜயராஜ் குமார், ராணிப்பேட்டை - மதுமதி, காஞ்சிபுரம் - அமுதவல்லி, செங்கல்பட்டு - சம்பத், விழுப்புரம் - பழனிசாமி, நெல்லை - ஜெயகாந்தன், தென்காசி - பொ.சங்கர், திருப்பத்தூர் - காமராஜ் ஆகியோரை நியமித்து தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் செப்.22ம் தேதி அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று பணியை தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: