மதுரையில் 70 கோடியில் பிரமாண்ட கலைஞர் நூலக கட்டிட வடிவமைப்பு தொடர்பாக முதல்வர் ஆலோசனை: அமைச்சர், அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: 70 கோடியில் மதுரையில் பிரமாண்டமாக கட்டப்படவுள்ள கலைஞர் நூலகத்தின் கட்டிட வடிவமைப்பை இறுதி செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாதன், தலைமை செயலாளர் இறையன்பு, பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, சிறப்பு செயலாளர் ரவீந்திரபாபு, மதுரை மண்டல தலைமை பொறியாளர் ரகுநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மதுரையில் கலைஞர் நூலகம்  மக்களை கவரும் நிலையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

இந்த நூலகம் கலைஞரின் பெயரை நினைவுக்கூரும் வகையில் இடம்பெறுமாறு அமைய வேண்டும். எனவே, அதுபோன்று வடிவமைப்புகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.இந்த நூலகத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கவும் தமிழக அரசு தயாராக உள்ள நிலையில், அதற்கேற்ப உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்கவும் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியபடி கட்டிட வடிவமைப்பில் மாற்றங்கள் செய்து, மீண்டும் முதல்வரிடம் காட்டி ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: