ரயில்வேயில் ஏஜென்சி லைசென்ஸ் பெற்று தருவதாக ரூ.1.25 கோடி மோசடி பணத்தை திரும்ப கேட்ட தொழிலதிபரை கடத்தி நிர்வாண வீடியோ எடுத்து கும்பல் மிரட்டல்

* மதுரை ரவுடி கணபதி துப்பாக்கி முனையில் கைது * முக்கிய குற்றவாளி, காவலருக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துகுமரன். தொழிலதிபரான இவர், சைதாப்பேட்டையில் தொலைதூர கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். ரயில்வே துறையில் தனியார் வேலைவாய்ப்புக்கான ஏஜென்சி தொடங்க முடிவு செய்தார். அதற்காக கொளத்தூரை சேர்ந்த லட்சுமி என்பவர் மூலம் கார்த்திக் பிரசன்னா என்பவர் அறிமுகமாகியுள்ளார். கார்த்திக் பிரசன்னா அசாம் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மருமகன் என கூறியுள்ளார். அத்துடன் அசாம் மாநில அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள், முன்னாள் மத்திய அமைச்சரான தன் மாமனாருடன் இருப்பது போன்ற புகைப்படங்களை காட்டியுள்ளார். பிறகு எனது மாமாவிடம் கூறி, ஏஜென்சி உரிமம் வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். அதற்காக 4 தவனையாக ரூ.1.25 கோடி பணம் பெற்றுக் கொண்டார். ஆனால், ஏஜென்சி உரிமம் பெற்று தரவில்லை. இதனால், கார்த்திக் பிரசன்னாவிடம், ஒப்பந்தம் வேண்டாம் நான் கொடுத்த ரூ.1.25 கோடி பணத்தை கொடு என்று கேட்டுள்ளார்.

இதற்கிடையே, இதேபோல் கரூரை சேர்ந்த முருகன் மற்றும் மும்பையை சேர்ந்த தீலுப் பணிக்கர் ஆகியோரிடம் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கார்த்திக் பிரசன்னாவிடம் தொழிலதிபர், கேட்டதற்கு அவர் சரியாக பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் கொடுத்த முத்துகுமரனை கடந்த ஜூலை 24ம் தேதி எழும்பூரில் உள்ள ஆல்பட் திரையரங்கம் அருகே கார்த்திக் பிரசன்னா போன் செய்து வரவழைத்துள்ளார். அங்கு சென்ற போது 4 பேர் போலீஸ் என்று கூறி மதுரையை சேர்ந்த ரவுடி கணபதி தனது அடியாட்களுடன் காரில் கடத்தியுள்ளார். பிறகு மதுரைக்கு அழைத்து செல்வதாக கூறி கொடைக்கானலுக்கு அழைத்து சென்று அங்கு சொகுசு விடுதியில் அடைத்து வைத்து நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து அடித்து உதைத்துள்ளனர்.அப்போது கார்த்திக் பிரசன்னா வசூல் ெசய்த பணத்தை முத்துகுமரன் தான் வைத்து இருப்பதாக வாக்குமூலம் பதிவு செய்து இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளனர். பிறகு திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் அருகே விடுவித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 13ம் தேதி காலையில் ரவுடி கணபதியின் நண்பரான காவலர் அருண்குமார் என்பவர் சந்தித்துள்ளார். அப்போது கார்த்திக் பிரசன்னா செய்த மோசடியை ஏற்றுக்கொண்டு சிறைக்கு  செல்ல வேண்டும். இல்லையேன்றால் ரவுடி கணபதியை வைத்து  கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் கடந்த 14ம்தேதி ரவுடி கணபதி தொழிலதிபர் முத்துகுமரனுக்கு போன் செய்து ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் கடத்தி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த முத்துகுமரன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்றால் கட்டாயம் கொலை செய்துவிடுவார்கள் என்று அச்சமடைந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து தன்னை மோசடி செய்த கார்த்திக் பிரசன்னா, ரவுடி கணபதி, காவலர் அருண்குமார் ஆகியோர் மீது நேற்று முன்தினம் அனைத்து ஆதாரங்களுடன் வடபழனி உதவி கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி விரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தொழிலதிபரை காரில் கடத்தி நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்ததும், விமான படையில் அதிகாரியாக வேலை பார்ப்பதாக போலியான அடையாள அட்டை வைத்திருந்த கார்த்திக் பிரசன்னா மற்றும் காவலர் அருண்குமார் ஆகியோர் இந்த மோசடியில் இருப்பது தெரியவந்தது.

அதைதொடர்ந்து விருகம்பாக்கம் போலீசார் தொழிலதிபர் முத்துகுமரனை கடத்திய மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி கணபதியை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மேலும், இந்த மோசடியின் முக்கிய குற்றவாளியான கார்த்திக் பிரசன்னா மற்றும் காவலர் அருண்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>