அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி அதிமுக பிரமுகர் 6.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோர் திரண்டு மறியல்

உசிலம்பட்டி:  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கவனம்பட்டியை சேர்ந்தவர் ராஜா சிவபிரகாசம் (49). உசிலம்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன். அதிமுக பிரமுகரான இவர் உசிலம்பட்டி - மதுரை சாலையிலுள்ள கதர் உபகிளை கூட்டுறவு குடிசைத்  தொழிற்சங்கத்தில் தலைவராக இருப்பதாக கூறி, அவரது அலுவலகத்திற்கு பலரையும்  வரவழைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்துள்ளார்.  சென்னை, பல்லடம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகிரி, சிதம்பரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த 195 பேரிடம் இவ்வாறு கூறி, ரூ.6 கோடியே 15 லட்சத்து 15 ஆயிரம் மோசடி செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது.  இவருக்கு புரோக்கர்களாக பேரையூர் அரசபட்டியை சேர்ந்த  டி.கல்லுப்பட்டியில் வசிக்கும் ராமசுப்பு, தேனி மாவட்டம், ஓடைப்பட்டி  அருகே அப்பிபட்டியை சேர்ந்த காளிமுத்து இருந்துள்ளனர்.

இவர்கள் பொதுமக்களிடம் பணம்  வாங்கி ராஜா சிவபிரகாசத்திடம் கொடுத்துள்ளனர். இவர்களில் ராமசுப்பு  தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், ‘‘தொழில்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால், 195 பேரிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பித்தர முடியவில்லை. என்னிடம் எந்த சொத்தும் இல்லை’’ என உசிலம்பட்டி நீதிமன்றம் மூலம் ராஜா சிவபிரகாசம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசை பெற்றுக்கொண்ட 195 பேரும் நேற்று உசிலம்பட்டி நீதிமன்றம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி பிரேம் ஆனந்த் அக். 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.ஆனால், அங்கு வந்திருந்த பொதுமக்கள், ``நாங்கள் பணத்தை கடனாக கொடுக்கவில்லை.

எங்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ராஜா சிவபிரகாசம் மோசடி செய்து நாடகம் ஆடுகிறார்’’ என்று நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுதனர். பின்னர் உசிலம்பட்டி - மதுரை சாலையில் ராஜா சிவபிரகாசம் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் செய்தனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பணம் வாங்கி கொடுத்த காளிமுத்துவும் மறியலில் கலந்து கொண்டார். மற்றவர்கள் அவரை தாக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த உசிலம்பட்டி போலீசார் முறையாக நீதிமன்றத்தை நாடி தீர்வு பெற்றுகொள்ளுங்கள் என்று கூறி அவர்களை கலையச் செய்தனர்.

Related Stories:

>