கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்: போலீசார் நடவடிக்கை

சென்னை: கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரில் உள்ள 60அடி சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகளின் முன்பு அமைக்கப்பட்ட மேற்கூரை, தள்ளுவண்டி மற்றும் நடைபாதை கடைகளால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். கொடுங்கையூர் போக்குவரத்து போலீசார் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும்படி பலமுறை தெரிவித்தும், சம்மந்தப்பட்டவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதுபற்றி, கொடுங்கையூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வரதன், எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணனுக்கு கடிதம் அளித்தார்.

அதன்பேரில், உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஜவகர், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வரதன் மற்றும் தண்டையார்பேட்டை மாநகராட்சி ஊழியர்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டோர் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். நடைபாதையில் சிலர் மெக்கானிக் ஷெட் அமைத்து வாகனங்களை அங்கு நிறுத்தி வைத்திருந்தனர். அவற்றையும் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகள் கொண்டு அதிகாரிகள் அகற்றினர். தொடர்ந்து அங்கு ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என போலீசார் எச்சரித்து சென்றனர்.

Related Stories: