மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில்  மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று  தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பல  மாவட்டங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 79 ஆயிரம் குடும்பங்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிடக் கோரியும் சென்னையைச் சேர்ந்த ராஜா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த  வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய  அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை  குடியிருப்பு நிலங்களாக வகை மாற்றம் செய்ய தடை உள்ள நிலையில், அந்நிலத்தில் ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே, மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் பி.முத்துக்குமார், மக்கள் தொகை அதிகரிப்பால் வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலைகள் தொடங்க விலக்களிக்கப்படுகிறது.

இந்த மனு சம்பந்தமாக விரிவான பதில்மனு தாக்கல் செய்யவுள்ளோம் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மக்கள் தொகை அதிகரித்து வருவதால், குடியிருப்புகளுக்கும்,  தொழிற்சாலைகளுக்கும், நிலங்களின் தேவை அதிகரித்து வருகிறது. நீண்டகால திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் வழங்க வேண்டும். மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்பும் இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பான நடவடிக்கை குறித்த விரிவான திட்ட அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: