ஐபிஎல் போட்டிகளை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் டி20 ஆட்டங்களை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற நடப்பு சீசன் ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் காரணமாக மே மாதம் இடைநிறுத்தப்பட்டது. அதுவரை நடந்த 29 ஆட்டங்களைக் காண ஸ்டேடியங்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. போட்டிகள் பூட்டிய அரங்கங்களில் மட்டுமே நடந்தன. இந்நிலையில், எஞ்சிய 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி, ஷார்ஜா மைதானங்களில் நடைபெற உள்ளன.

அதற்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணி வீரர்களும் அங்கு முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதல் ஆட்டம்  செப்.19ம் தேதி துபாயில் நடக்கிறது. அதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் ஆட்டங்களை நேரல் காண ரசிகர்களுக்கு அனுமதி தரப்படுமா என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில், இத்தொடருக்கான தலைமை  செயல் அலுவலர் ஹேமங் அமீன், ‘அமீரகத்தில் நடைபெறும் எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களைக் காண ரசிகர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்’ என்று கூறியுள்ளார்.

ஆனால் எவ்வளவு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்?, ஆட்டங்கள் நடைபெற உள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி என 3 இடங்களிலும் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? என்ற விவரங்கள் இன்னும் வெளியாக வில்லை. இருப்பினும் அமீரகத்தில் ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் 2019ம் ஆண்டுக்கு  பிறகு ஐபிஎல் ஆட்டங்களை ஸ்டேடியங்களில் நேரில் கண்டு ரசிக்கும் அனுபவம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிடைக்க உள்ளது. கடந்த ஆண்டு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரிலும் கொரோனா பீதி காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டங்கள் இந்தியாவில் நடந்தபோதும் ரசிகர்களை அனுமதிக்கவில்லை.

* டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களுக்கு ரசிகர்களை அனுமதிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதைத் தொடர்ந்து போட்டிக்கான டிக்கெட் ஐபிஎல் இணையதளத்தில் இன்று முதல் விற்பனை செய்யப்படும். எனவே டிக்கெட் வாங்க விரும்புவோர் ஐபிஎல் இணையதளமான www.iplt20.com அல்லது PlatinumList.net என்ற இணைய தளங்கள் மூலம் ஆன்லைனில் வாங்கலாம். எஞ்சியுள்ள 31 ஆட்டங்களில் 13 ஆட்டங்கள் துபாயிலும், 10 ஆட்டங்கள் ஷார்ஜாவிலும், 8 ஆட்டங்கள் அபுதாபியிலும் நடைபெற உள்ளன.

Related Stories: