இளையான்குடியில் கால்நடை மருத்துவக்கல்லூரி வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

இளையான்குடி: இளையான்குடியில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரியை அமைக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டாரத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு மிக முக்கியமான தொழிலாக உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காளையார்கோவில் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, நயினார்கோயில், ஆர்எஸ்.மங்கலம் ஆகிய வட்டாரங்களுக்கு இளையான்குடி பகுதியே மையமாக செயல்படுகிறது. இந்த பகுதியில் அதிகளவில் ஆடு, மாடு, நாட்டு கோழிகள் வளர்த்து வருகின்றனர். இங்கு கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாததால், அதனால் ஏற்படும் நன்மைகளான தொழில் மேம்பாடு, விற்பனை, சந்தைபடுத்துதல், பால் உற்பத்தி, ஆரோக்கிய உணவு ஆகியவை குறித்து தெரியாமலேயே காலங்காலமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள், இயற்கையான முறையில் இனப்பெருக்க முறைகள் குறித்த வழிமுறைகள் தெரியாமலேயே உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 10 கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு கல்லூரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. ஆனால் கால்நடை வளர்ப்பில் தங்களது வாழ்வியலின் ஒரு அங்கமாக ஈடுபடும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு கல்லூரியை ஏற்படுத்தவில்லை. கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, நாட்டுக்கோழி வளர்ப்பு ஆகியவற்றை அதிகப்படுத்தவும், வருங்கால கிராமப்புற மாணவர்கள் இது தொடர்பான படிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஆர்வத்துடன் ஈடுபடவும், இளையான்குடியில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு கல்லூரியை அமைக்க, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமூக ஆர்வலர் பரமேஸ் கூறுகையில், ‘‘இளையான்குடி பகுதியில் 80 சதவீத கிராமத்தில் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இந்த பகுதி இளைஞர்கள் இதுகுறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்கள் இல்லாமல் வெவ்வேறு படிப்புகளை படித்து வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடைகள் பெருகியுள்ள இளையான்குடியில், அரசு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு கல்லூரியை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

Related Stories: