ராமநாதபுரம் நகர் பகுதியில் தொல்லை கொடுத்த பன்றிகள் வேட்டை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளுக்கு உட்பட்ட அண்ணா நகர், பெரியார் நகர், கோட்டை மேடு, நாகநாதபுரம், கறிவேப்பிலை காரத்தெரு உள்ளிட்ட பகுதிகளின் ஒதுக்கு புறங்களில் நீண்ட நாட்களாக இறைச்சிக்காக பலர் பன்றிகள் வளர்த்து வருகின்றனர். எண்ணிக்கையில் பல்கி பெருகி பன்றிகள் கூட்டம், கூட்டமாக இரை தேடி நகருக்குள் சுற்றி திரிந்தன. 3 அடி உயர பன்றிகள் பொதுமக்களை மிரட்டும் வகையில் உறுமித்திரிந்தன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து நகராட்சி துப்புரவு நிர்வாகம் நடவடிக்கையின் பேரில் விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து பன்றி பிடி தொழிலாளர்கள் நேற்று வந்தனர். வசந்தம் நகர், கறிவேப்பிலை கார தெரு, புளிக்காரத் தெரு, சாயக்காரத் தெரு, பெரியார் நகர், சின்னக்கடை, கோட்டைமேடு ஆகிய இடங்களில் சுற்றித்திரிந்த 50 பன்றிகளை அப்புறப்படுத்தினர்.நகராட்சி துப்புரவு அலுவலர் ஸ்டாலின் குமார் கூறியதாவது: நகரின் ஒதுக்கு புறங்களில் வளர்க்கப்படும் பன்றிகள் நகருக்குள் புகுந்து சுகாதாரக்சீர்கேடு மற்றும் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்தன.

இவற்றை அப்புறப்படுத்த பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். நகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பொதுமக்களின் வேண்டுகோள்படி, நகராட்சி எல்லைக்குள் சுற்றி திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அறிவுறுத்தினார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினரின் தனி உதவியாளரும் புகார் அளித்தார். இதன்படி 50 பன்றிகள் நேற்று அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் சுற்றி திரியும் பன்றிகள் ஒரு வாரத்திற்கு பின்னர் அப்புறப்படுத்தப்படும் என்றார்.

Related Stories: