செம்மஞ்சேரி காவல் நிலைய விவகாரம் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன? தமிழக அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தாக்கல் செய்துள்ள மனுவில், செம்மஞ்சேரி காவல்நிலையம் உள்ள இடம், தாமரைக்கேணி என்ற நீர்நிலை. இதை அகற்றி  நீர்நிலையை பழைய நிலைக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐஐடியின் 2 பேராசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது. அதன்படி, நியமிக்கப்பட்ட ஐஐடி பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன் மற்றும் சவுமேந்திரர் ஆகியோர் அடங்கிய குழு ஏரி பகுதியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது.

அதில், செம்மஞ்சேரி காவல் நிலையம் ஏரியில்தான் கட்டப்பட்டுள்ளது. அதை மட்டும் இடித்துவிட்டால் பெரிய மாற்றம் ஏற்படாது என்ற தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், அந்த நீர் நிலையில் எந்தெந்த ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என ஐஐடி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், முன்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, கால்வாய்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது நீர் தேங்கும் பகுதிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் மீது எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும் அதனை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தனர்.

Related Stories: