கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு!: ஒன்றிய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியின் திமுக எம்.எல்.ஏ.வும் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியுமான டாக்டர் எழிலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருக்கிறார். மனுவில், கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான விதிமீறல் என்றும் இந்தியாவில் 1975 முதல் 77 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்பட்டு மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும்  சுட்டிக்காட்டியிருக்கிறார்.

குறிப்பாக 1976ம் ஆண்டு மொத்தம் 5 முக்கிய துறைகளில் பொதுப்பணித்துறைக்கு மாற்றப்பட்டுள்ள கல்வி மிக முக்கியமானது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். மாநில அரசுகளின் அனுமதியின்றி, முறையான சட்டவிதிகளை பின்பற்றாமல் எமர்ஜென்சி காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது என்றும் மனுவில் கூறியுள்ளார். இவ்வாறு கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதால் தற்போது நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்வி கொள்கைகள் போன்ற சட்டங்கள் ஒன்றிய அரசு மூலமாக அமலுக்கு வந்துள்ளது என்றும் எனவே கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அச்சமயம் மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, அரசியலமைப்பு சட்டம், கூட்டாட்சி கட்டமைப்புக்கு  எதிராக கல்வி என்பது மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார். ஏற்கனவே உச்சநீதிமன்றம் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் கூட்டாட்சி தொடர்பாக முழுமையாக விளக்கப்பட்டிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசையும் பிரதிநிதியாக சேர்க்க உத்தரவிட்டனர். மேலும், இதுகுறித்து ஒன்றிய அரசு, தமிழக அரசு 8 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்து வழக்கு விசாரணையை 10 வாரத்திற்கு ஒத்திவைத்திருக்கிறார்கள்.

Related Stories: