கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் முதல்வர்களால் அறிவிக்கப்பட்ட ரூ.2.40 லட்சம் கோடி மதிப்பீட்டிலான 537 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன: சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிர்ச்சி தகவல்

சென்னை: 2011-12 முதல் 2020-21 வரை தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110ன் கீழ் அப்போதைய முதல்வர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்த விவரங்களை சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: 2011-12 முதல் 2020-21  வரை கடந்த 10 ஆண்டுகளில் தமிழக சட்டமன்ற பேரவை விதி 110 கீழ் 327 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 1704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் 87,405 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1167 அறிவிப்புகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன. 2.40 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கான 537 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான அறிவிப்புகள் அரசாணை மட்டுமே வெளியிடப்பட்ட நிலையில் பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது. சில அறிவிப்புகள் கைவிடப்பட்டுள்ளன.

சிலவற்றிற்கு அரசாணை வெளியிடப்படவில்லை. செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ள அறிவிப்புகளில் ரூ.5470 கோடி  திட்ட மதிப்பீட்டிலான 26 அறிவிப்புகள், அவற்றை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் எவற்றையும் அறிவிப்புவதற்கு முன் ஆய்வு மேற்கொள்ளாமல் 110 விதிகளின் கீழ் அறிவிக்கப்பட்டு பின்னர் செயல்படுத்த இயலாதவை என கைவிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான, அதாவது 19 அறிவிப்புகள் 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை உள்ள ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டவையாகும்.

110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள 537 அறிவிப்புகளில், 9741 கோடி ரூபாய் திட்ட மதிப்பிலான 20 அறிவுப்புகளுக்கு, கடந்த ஆட்சி காலத்தில் அதற்குரிய அரசாணைகள் ஏதுவும் பிறப்பிக்கப்படவில்லை. 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள 537 அறிவிப்புகளில் 491 அறிவிப்புகளுக்கு அரசாணை மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 76,619 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 143 அறிவிப்புகளுக்கு அதற்குரிய அரசாணை மற்றும் அனுமதி வழங்கப்பட்டு, நிதி ஏதுவும் விடுக்கப்படாமலும், பணிகள் துவங்கப்படாமலும் உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு கைவிடப்பட்ட 26 அறிவிப்புகள் தவிர ஏனைய நிலுவையில் உள்ள 511 அறிவிப்புகளுக்கு உரிய 2,34,282 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கடந்த ஆட்சி காலத்தில் 45,251 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: