குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி: வீட்டின் உரிமையாளர், ஒப்பந்ததாரர் கைது

சென்னை: சூளைமேட்டில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளர், ஒப்பந்ததாரர் ஆகிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலு (59). இவரது வீட்டில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி, பல ஆண்டாக பயன்பாடின்றி மூடிக்கிடந்தது. இதை சுத்தம் செய்ய முடிவு செய்த பாலு, அதற்காக கொரட்டூர் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ராஜ்பாபு (33) என்பவரை அனுகினார். அவர், திருவேற்காடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் முத்துகிருஷ்ணன் (40), திப்பு சுல்தான் (25) ஆகிய இருவரை நேற்று முன்தினம் மாலை பாலு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அவர்கள் இருவரும், பாலு வீட்டில் உள்ள குடிநீர் தொட்டியை திறந்து, சுத்த செய்ய உள்ளே இறங்கினர். பல ஆண்டாக மூடிக்கிடந்த குடிநீர் தொட்டி என்பதால், விஷவாயு தாக்கி இருவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். குடிநீர் தொட்டி உள்ளே சென்ற 2 பேர் வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த பாலு டார்ச் லைட் அடித்து குடிநீர் தொட்டிக்குள் பார்த்துள்ளார். அப்போது, இருவரும் உள்ளே மயங்கி கிடந்தது தெரிந்தது. உடனே, உதவி கேட்டு அலறினார். சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து, இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் இரண்டு பேரையும் பரிசோதனை செய்து, அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த சூளைமேடு போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, வீட்டின் உரிமையாளர் பாலு, ஒப்பந்ததாரர் ராஜ்பாபு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல ஆண்டாக மூடிக்கிடந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய தொழிலாளர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி உள்ளே இறங்கியதே உயிரிழப்புக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: