உணவில் மயக்க மருந்து கலந்து டெல்லி நிஜாமுதீன் ரயிலில் 3 பெண்களிடம் கொள்ளை: 15 பவுன் நகை, செல்போன் போச்சு

திருவனந்தபுரம்: டெல்லி - திருவனந்தபுரம் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவையை சேர்ந்த பெண் உட்பட 3 பெண்களுக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 15 பவுன் நகை, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. கேரள மாநிலம், திருவல்லா பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் டெல்லியில் வசித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, மகள் அஞ்சலியுடன் டெல்லி- திருவனந்தபுரம் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார். அதே ரயிலில் கோவையை சேர்ந்த கவுசல்யா என்பவரும், காயங்குளத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு பயணம் செய்தார்.

இந்நிலையில், இவர்கள் ஈரோட்டில் இரவு உணவு வாங்கி சாப்பிட்டுள்ளனர். பின்னர் 3 பேரும் மயக்கம் அடைந்தனர். நேற்று காலை 7.10க்கு ரயில் திருவனந்தபுரம் வந்தபோது, இவர்கள் மயங்கி கிடப்பதை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்டனர். அவர்கள் திருவனந்தபுரம் ரயில்வே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகு அவர்களுக்கு மயக்கம் தெளிந்தது. பின்னர், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விஜயலட்சுமி கூறுகையில், ‘ஈரோட்டில் சாப்பிடுவதற்காக உணவை வாங்கினேன்.

சாப்பாட்டை இருக்கையில் வைத்து விட்டு நானும், மகளும் கைகழுவ சென்றோம். பின்னர், வந்து உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில மயங்கி விட்டோம். பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை. நாங்கள் அணிந்திருந்த 15 பவுன் நகைகளை காணவில்லை,’ என்று கூறினார். கவுசல்யாவிடம் விசாரித்த போது, ‘அயர்ந்து தூங்கி விட்டதால் காயாங்குளம் ஸ்டேஷனில் இறங்க முடியவில்லை. என்னிடம் இருந்த செல்போனை காணவில்லை,’ என கூறினார். இவர்களிடம் கொள்ளையடித்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: