புதுச்சேரி போலீசை கண்டித்து பாஜ எம்எல்ஏக்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி டிராபிக் போலீசை கண்டித்து பாஜ எம்எல்ஏக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் டாக்டர் துரை (35). அரசின் சுகாதாரத்துறையில் கோவிட் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை ரவி (64). பாஜகவில் முக்கிய நிர்வாகியான இவர் மிஷன்வீதியில் பால் பொருட்கள் கடை நடத்தி வருகிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி நேற்று அங்கு சாலையில் இடையூறாக இருந்த பொருட்களை அப்புறப்படுத்துமாறு போக்குவரத்து போலீசார் எச்சரித்தனர். ரவியின் பால்பூத்தில் உள்ள பிரிஜ் சாலையோரம் இடையூறாக இருந்துள்ளது.

இதை அகற்றுமாறு போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர். அவர் அதை எடுக்காததால், ரவியை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த மருத்துவர் துரையையும் போலீசார் தள்ளி விட்டார்களாம். இதுபற்றி தகவல் கிடைக்கவே பாஜ எம்எல்ஏக்கள் ஜான்குமார், விவிலியன் ரிச்சர்ட், ராமலிங்கம், கல்யாணசுந்தரம் மற்றும் சிவசங்கர், பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் வந்து, பாஜ நிர்வாகிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அமைச்சர் லட்சுமி நாராயணன் வந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறையிடம் புகார் அளிக்கும்படியும், அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தபின் அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: