உத்தரகாண்ட், கர்நாடகா, குஜராத்தை தொடர்ந்து விரைவில் 3 மாநில பாஜ முதல்வர்களின் பதவி காலி? 19% வாக்குகள் சரிவால் தலைமை தவிப்பு..!

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் 19 சதவீத வாக்குகள் சரிவால், உத்தரகாண்ட், கர்நாடகா, குஜராத்தை தொடர்ந்து விரைவில் மேலும் 3 பாஜ முதல்வர்களின் பதவி பறிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த இரு மக்களவை தேர்தலிலும் பாஜக ஆட்சியை பிடித்திருந்தாலும், அடுத்ததாக வரும் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை அக்கட்சி தொடங்கிவிட்டது. அதற்காக, மாநில அளவில் முதல்வர்கள் மாற்றம் தொடங்கி நிர்வாகிகள் மாற்றம் வரை செயல்படுத்தி வருகிறது. பல மாநிலங்களில் பாஜக ஆளுங்கட்சியாக இருந்தாலும் கூட, அம்மாநில முதல்வர்களால் மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. அதனால், கட்சிக்குள்ளும் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவை, அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், முதல்வர்கள் மாற்றங்கள் தொடர்கின்றன.

அந்த வகையில், கடந்த சில மாதங்களில் உத்தரகாண்ட்டில் இரு முதல்வர், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ஆகியோரின் முதல்வர் பதவிகள் பறிக்கப்பட்டது. தற்போது குஜராத்தில் விஜய் ரூபானியின் முதல்வர் பதவியும் பறிக்கப்பட்டது. இதே பார்முலாவை அரியானா, திரிபுரா, மத்திய பிரதேசத்திலும் படிப்படியாக அமல்படுத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் புதியவர்கள் முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால், உள்ளூர் தலைமையின் (முதல்வர்) செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. கடந்த மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஐந்து முதல் 19 சதவீத வாக்குகளை பாஜக இழந்தது. அதனால், மாநிலம் வாரியாக தலைமை மாற்றம் குறித்து ‘ஸ்கிரிப்ட்’ தயார் செய்யப்பட்டது.

அதன்படி, முதலில் உத்தரகண்டிலும், பின்னர் கர்நாடகாவிலும், இப்போது குஜராத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இவை பெரும்பாலும், சாதி அடிப்படையிலான மாற்றங்களாக உள்ளன. மக்களவைத் தேர்தலில் மோடி என்ற பெயரிலும், மாநிலங்களில் அந்தந்த சாதிய அடிப்படையிலும் முதல்வர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: