குடியாத்தம் அடுத்த பனந்தோப்பு பகுதியில் ஏரிக்கால்வாயில் நிரந்தர பாலம் அமைக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை

குடியாத்தம்: குடியாத்தம் அடுத்த உள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோப்பம்பட்டி கிராமத்தில்  பனந்தோப்பு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், தற்போது குடியாத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் குடியாத்தம்  அடுத்த வளத்தூர் கிராமத்திலுள்ள ஏரி  முழு கொள்ளளவை எட்டியது. இதனால், ஏரியிலிருந்து நிரம்பி வழியும் தண்ணீர், குடியாத்தம் அடுத்த பனந்தோப்பு பகுதியிலுள்ள ஏரிக்கால்வாயில் இரு கரை புரண்டு தண்ணீர் செல்கிறது.

அதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது ஏரிக்கால்வாயில் இருகரையில் தொட்டு தண்ணீர் அதிகப்படியாக செல்வதால், தரைபாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பனை மற்றும் தென்னை மரங்களை கொண்டு தற்காலிக பாலம் அமைத்து அதன்மீது சென்று வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது: பனந்தோப்பு அருகே உள்ள கால்வாய் வழியாக ஏரியிலிருந்து வரும் உபரி நீர் செல்கிறது.

இதனால், எங்களால் அக்கரைக்கு செல்ல முடியாததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம மக்கள் அப்பகுதியில் தென்னை மற்றும் மரப்பலகைகளை கொண்டு தற்காலிக பாலம் அமைத்து சென்று வருகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாலம் அமைக்கக்கோரி தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் எங்கள் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் அவசரத்தேவைக்காக மருத்துவமனைக்கு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த பாலத்தின் மீது அழைத்து செல்ல முடியாத நிலை உள்ளது.

தொடர்ந்து சொந்தவேலை காரணமாக ஏரிக்கால்வாயின் மீது அமைக்கப்பட்டுள்ள மரப்பாலத்தில் ஆபத்தான நிலையில் சென்று வருகிறோம். எனவே மாவட்ட அதிகாரிகள் எங்கள் கிராமத்தில் ஏரிக்கால்வாய் மீது பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: