ரூ.200 கோடி மோசடி வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளிகள் 4 பேரிடம் சென்னையில் விசாரணை : டெல்லி போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை: தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் பெற்று தருவது  தொடர்பான வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் ரூ.200 கோடி மோசடியில்  கைதுசெய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு, கிழக்கு கடற்கரை  சாலையில் பண்ணை வீடு வாங்கி கொடுத்த கமலேஷ் கோத்தாரி, நடிகை லீனா  மரியம்பாலின் மேலாளர் சாமுவேல், சொகுசு கார்கள் வாங்கி கொடுத்த அருண்  முத்து, மோகன்ராஜ் ஆகிய 4 பேரிடம் டெல்லி போலீசார் மாம்பலம் காவல்  நிலையத்தில் வைத்து விடியவிடிய தீவிர விசாரணை நடத்தினர். அதில்  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  இறந்த பிறகு ஏற்பட்ட மோதலில் இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக சின்னமான  இரட்டை இலை சின்னத்தை சசிகலாவின் டிடிவி.தினகரன் தரப்பினர் பெற பல்வேறு  முயற்சிகள் எடுத்தனர். இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலமும்  முயற்சி எடுக்கப்பட்டது. அதற்காக ரூ.50 கோடி பேரம் சுகேஷ் சந்திரசேகரிடம்  பேசப்பட்டதாக கூறப்பட்டது. பிறகு முற்கட்டமாக ரூ.2 கோடி பணத்தை இடைத்தரகர்  சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கொடுக்கும் போது  டெல்லி போலீசார் கையும் களவுமாக பிடித்து சுகேஷ் சந்திரசேகரை கைது  செய்தனர்.

பின்னர் சுகேஷ் சந்திர சேகரிடம் நடத்திய விசாரணையில்,  திகார் சிறையில் உள்ள பிரபல தொழிலதிபர் ஒருவரை ஜாமீன் எடுக்க உதவுவதாக  ஒன்றிய அமைச்சர் ஒருவரின் செயலாளர் போல சிறையில் உள்ள தொழிலதிபர்  மனைவியுடன் பேசி பல கோடி ரூபாய் பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து  பாதிக்கப்பட்ட தொழிலதிபர் மனைவி டெல்லி காவல் துறையில் புகார் அளித்தார்.  அந்த புகாரின்படி ஏற்கனவே சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரை டெல்லி  போலீசார் கைது செய்தனர். மேலும், இதுபோல் பலரிடம் மத்திய அரசு ஒப்பந்தங்கள்  பெற்று தருவதாகவும், உயர் பதவிகள் வாங்கி தருவதாகவும், அரசியல்வாதிகளுக்கு  எம்.பி. சீட்டு வாங்கி தருவதாகவும், பாஜ கட்சியில் தேசிய பதவிகள் வாங்கி  தருவதாகவும் மொத்தம் ரூ.200 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததும்  தெரியவந்தது.

அதேநேரம் திகார் சிறையில் இருக்கும்போது, சுகேஷ் சந்திரசேகர்  சிறையில் உள்ள சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறைத்துறை உதவி  கண்காணிப்பாளர்கள் என 15க்கும் மேற்பட்டோரை தனக்கு சாதகமாக பயன்படுத்தி  கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

இதற்கிடையே  இந்த மோசடிக்கு வெளிநாடுகளில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் வங்கி கணக்கிற்கு  பல கோடி ரூபாய் கைமாறியது தெரியவந்தது. இதுகுறித்து அமலாகத்துறை  அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து கடந்த மாதம் 23ம் தேதி சென்னை  கானாத்தூரில் உள்ள இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது காதலி  லீனா தங்கி இருந்த பண்ணை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த  சோதனையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி ரூபாய்  மதிப்புள்ள மும்பை, மத்திய பிரதேசம், டெல்லி, சென்னை என பல்வேறு மாநில  பதிவு எண்கள் கொண்ட 16 சொகுசு கார்கள், கணக்கில் வராத ரூ.82.50 லட்சம்  ரொக்கம், 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து பண்ணை வீட்டை  அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.  இந்நிலையில் இந்த  மோசடி தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு  செய்து மோசடிக்கு உடந்தையாக இருந்து சுகேஷ் சந்திரசேகர் காதலி லீனா  மரியம்பாலை கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின்படி மோசடிக்கு உடந்தையாக  இருந்த அவரது மேலாளர் சாமுவேல், சென்னை கானாத்தூரில் பண்ணை வீட்டை வாங்கி  கொடுத்த இடைத்தரகர் கமலேஷ் கோத்தாரி, வெளிநாட்டு சொகுசு கார்களை வாங்க  உதவிய அருண்முத்து மற்றும் சுகேஷ் சந்திரசேகரின் வழக்கறிஞர் மோகன்ராஜ்  ஆகியோரை கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட கமலேஷ் கோத்தாரி,  அருண்முத்து, மோகன்ராஜ், சாமுவேல் ஆகியோரை டெல்லி போலீசார் விசாரணைக்காக  ேநற்று முன்தினம் சென்னைக்கு அழைத்து வந்தனர். பிறகு சென்னை போலீசார்  உதவியுடன் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 4 பேரையும் மோசடி  தொடர்பாக பல இடங்களில் நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

பிறகு  மாம்பலம் காவல்நிலையத்தில் வைத்து விடியவிடிய விசாரணை நடத்தப்பட்டது.  அப்போது, பண்ணை வீடு வாங்கியது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியானது. சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தபடி தனது காதலி நடிகை லீனா மரியம்பால்  மூலம் மோசடிகளை அரங்கேற்றி வந்துள்ளார். இந்த மோசடிக்கு சென்னை கிழக்கு  கடற்கரையில் சாலையில் உள்ள பண்ணை வீட்டை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.  முக்கிய பிரமுகர்கள் வந்து செல்வதால் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்  வகையில் பண்ணை வீட்டை சுகேஷ் சந்திரசேகர் நட்சத்திர ஓட்டலுக்கு இணையாக  சொகுசு வசதிகளை வடிவமைத்து தனது காதலி மூலம் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்  பிரமுகர்களை மயக்கி மோசடியை தடையின்றி அரங்கேற்றி வந்தது டெல்லி போலீசார்  நடத்திய விசாரணையில் தெரியவந்தது.   இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின்  மோசடி வழக்கில் அவரது காதலி நடிகை லீனா மரியம்பால் உட்பட 13 பேர் டெல்லி  பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்  குறிப்பிடத்தக்கது.

Related Stories: