ஓசூர் அருகே பரபரப்பு தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழப்பு: அக்கு பஞ்சர் நிபுணர் ஓட்டம்; மருந்து கடைக்கு சீல் வைப்பு

ஓசூர்: ஓசூர் அருகே தொரப்பள்ளியில், அக்குபஞ்சர் மையத்தில் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண் இறந்தார். இதையடுத்து அங்குள்ள மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கிருஷ்ணரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ரியாஸ் (28). கூலி தொழிலாளி. இவரது மனைவி கோரிமா (27). 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கோரிமா 2 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களாக உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்த கோரிமா, அங்குள்ள அக்குபஞ்சர் மையத்தில் முருகேசன் என்பவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அங்கு சிகிச்சை பெற்ற கோரிமாவுக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். புகாரின் பேரில் ஓசூர் நகர போலீசார் மற்றும் மருத்துவத்துறையினர் விசாரணை நடத்தினர். இதனால் சிகிச்சை மையத்தை மூடிவிட்டு முருகேசன் தலைமறைவானார். இதையடுத்து மருத்துவத்துறையினர் காவல்துறை உதவியுடன் முருகேசனின் மெடிக்கல் சென்டரின் பூட்டை உடைத்து சோதனை நடத்தினர். இதில் அவர் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

பின்னர் அங்கிருந்த மருந்து பொருட்கள், ஊசி மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்து மருந்து கடைக்கு சீல் வைத்தனர். தலைமறைவான முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பூபதி கூறுகையில், ஆங்கில மருத்துவம் படிக்காமல் முருகேசன் நோயாளிகளுக்கு அலோபதி சிசிச்சை அளித்துள்ளார். அங்கிருந்த அனைத்து மருத்துவ பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கர்ப்பிணியான கோரிமா அவருடைய தவறான சிகிச்சையால்தான் உயிரிழந்தார் என கண்டறிந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: