சுற்றுலாதலமான ஏலகிரி மலையின் பின்புறம் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி: வனத்துறை அதிகாரி தகவல்

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் 6 மாதத்திற்கு பிறகு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுலாத்தலமாக விளங்கும் ஏழைகளின் ஊட்டியான ஏலகிரிமலை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, ஆண்டியப்பனூர் அணை, ஏழருவி, ஜவ்வாது மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளது. இதில் ஏலகிரி மலையின் பின்புறம் உள்ள பகுதியில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் வருடத்தில் 6 மாதத்திற்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்த நிலையில் சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து இங்கு ஆனந்த குளியல் போட்டு நீராடிச் சென்று வந்தனர். தற்போது கடந்த 6 மாத காலம் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்த நிலையில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் நீராடி செல்கின்றனர். இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் பிரபு கூறியதாவது: ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் உடை மாற்றும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.இந்நிலையில் நோய்த்தொற்று காரணமாக கடந்த 6 மாதமாக சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உட்பட அனைவரும் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின்பேரில் கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்வீழ்ச்சிக்கு செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் அனைத்து பொதுமக்களும் முகக்கவசம், சமூக இடைவெளி ஆகிய விதிகளை கடைபிடித்து நீர்வீழ்ச்சியில் நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மது அருந்தினால் நடவடிக்கை

வனத்துறை அதிகாரி மேலும் கூறுகையில், ‘நீர்வீழ்ச்சி பகுதியில் பொதுமக்களுக்கு குளிக்க மட்டும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சி பாறைகள் மேலே ஏறிச் சென்று மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் வனத்துறையினர் மூலம் பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்தார்.

Related Stories: