கொடநாடு வழக்கு புலன் விசாரணை ஐஜி தலைமையில் 3 மணி நேரம் அதிகாரிகள் ஆலோசனை

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கு தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் நேற்று மேற்கு மண்டல ஐஜி, டிஐஜி, தலைமையில் 3 மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள பழைய எஸ்பி அலுவலகத்தில் நடந்தது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய சாட்சிகளிடம் ஐஜி சுதாகர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் ஐஜி தலைமையில் போலீசார் ஊட்டி பழைய எஸ்பி அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். குற்றவாளிகளின் உறவினரிடமும், பார் உரிமையாளர் அணீஷ் ஆகியோரிடமும்  விசாரணை நடத்தப்பட்டது. அரசு தரப்பு சாட்சிகளாக 101 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது, முக்கிய சாட்சிகளை மீண்டும் அழைத்து விசாரித்து வரும் நிலையில், மேலும் பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். நேற்று ஊட்டி பழைய எஸ்பி அலுவலகத்தில் ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டம் 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதில், நீலகிரி மாவட்ட எஸ்பி ஆசீஷ்ராவத், கூடுதல் எஸ்பிக்கள் கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது இவ்வழக்கு தொடர்பாக யாரிடமாவது விசாரணை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று மாலை வரை யாரிடமும் தனிப்படையினர் விசாரணை நடத்தவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: