பெசன்ட்நகரில் இன்று நடைபெறும் அன்னை வேளாங்கண்ணி திருத்தல தேர்திருவிழாவில் பக்தர்களுக்கு தடை: காவல் துறை அறிவிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பெசன்ட்நகரில் இன்று நடைபெறும் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49வது தேர்திருவிழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள சென்னை மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது. சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49வது வருடாந்திர திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கி, நாளை வரை நடைபெறுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால், இந்த திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதித்தும், விழா நிகழ்ச்சிகளை இணையதளத்தில் காணவும் ஆலய நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், முக்கிய நிகழ்வான தேர்திருவிழா இன்று நடைபெற உள்ளதால், இதில் பக்தர்கள் பங்கேற்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை மாநகர காவல் துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

* கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலய திருவிழாவில் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. இன்று (7ம் தேதி) தேரோட்ட நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களும், பக்தர்களும் தேரோட்ட நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் நேரடி சமூக வலைதளங்கள் மூலம் காண அறிவுறுத்தப்படுகிறது.

* பொதுமக்கள் நாளை பெசன்ட்நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன் வர வேண்டாம். காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

* அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட கடந்த மாதம் 28ம் தேதி முதல் நாளை வரை அனுமதி மறுக்கப்படுகிறது.

* இந்த திருவிழா நாட்களில் பொதுமக்களும், பக்தர்களும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

* பொதுமக்களும், பக்தர்களும் சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, இந்த கொரோனா பெருந்தொற்றிலிருந்து விடுபட ஒத்துழைப்பு நல்கி தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: