மரவியல் பூங்காவினை பிரபலப்படுத்த கோரிக்கை

ஊட்டி : ஊட்டி மரவியல் பூங்கா குறித்து தெரியாததால் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே பார்வையிட்டு செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, ஊட்டி மரவியல் பூங்கா மற்றும் தேயிலை பூங்கா ஆகியவை உள்ளன. ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் இப்பூங்காக்களை பார்த்து செல்வது வழக்கம்.

ஊட்டியில் இருந்து எமரால்டு செல்லும் சாலையில் பஸ் நிலையத்திறகு பின்புறம் மரவியல் பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில் பல்ேவறு அரிய வகை மரங்கள் உள்ளன. ஊட்டி நகருக்கு மிக அருகில் உள்ள இப்பூங்கா குறித்து சுற்றுலா பயணிகளுக்கு தெரிவதில்லை. இதனால் இப்பூங்காவை மிக குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். இந்த சூழலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அதனை தடுக்கும் நோக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் 4 மாதங்களுக்கு பின் கடந்த 23ம் தேதி முதல் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் பூங்காக்கள் மற்றும் பிற சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டுள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

இருப்பினும் மரவியல் பூங்கா குறித்து தெரியாததால் இதனை தற்போதும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே பார்த்து செல்கின்றனர். குறிப்பாக பூங்கா திறக்கப்பட்டு 13 நாட்கள் ஆன நிலையில் வெறும் 543 பேர் மட்டுமே பார்த்து சென்றுள்ளனர். அதிலும் 29ம் தேதியை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை.

புதிதாக திருமணமான தம்பதிகள் மட்டும் திருமண புகைப்படங்கள் எடுக்க வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தேயிலை பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே உள்ளது. எனவே தோட்டக்கலைத்துறை இப்பூங்காக்களை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்ைக எழுந்துள்ளது.

Related Stories: